10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு திருக்குறள் கூறினால் ஒரு கரும்பு ஜூஸ் இலவசம், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 3 திருக்குறள் கூறினால் ஒரு ஜூஸ் இலவசம் என கரும்பு ஜூஸ் விற்பனை செய்யும் உரிமையாளர் கல்லூரி மாணவன் தமிழ் பற்று
திருக்குறளை வளர்க்க கடை உரிமையாளர்
காஞ்சிபுரம் (Kanchipuram News) : காஞ்சிபுரத்தில் திருக்குறள் சொன்னால் கரும்பு ஜீஸ் இலவசம் என்ற கடை உரிமையாளரின் அறிவிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் ஜூஸ் கடைகளிலும், பழக்கடைகளிலும் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இந்நிலையில் பலரும் கவரும் வகையில் காஞ்சிபுரத்தில் திருக்குறள் கூறினால் கரும்பு ஜுஸ் இலவசம் என்ற கடை உரிமையாளரின் அறிவிப்பால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து திருக்குறளை கூறி இலவசமாக கரும்பு ஜுஸ் வாங்கி அருந்தி வருகின்றனர்.
கோடை வெயில் தாக்கத்தில் பொதுமக்கள் அதிகளவில் கரும்பு ஜூஸ் கடைக்கு வருகை தந்து சில்லென்று கரும்பு ஜூஸ் குடித்து வருகின்றனர். இந்நிலையில் கரும்பு ஜூஸை கொடுத்து திருக்குறளை வளர்க்க கடை உரிமையாளர் எடுக்கும் முயற்சி பலராலும் பாராட்டப்படுகிறது.
இலவசமாக ஜூஸ்
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவன் கோகுல் கோடை வெயில் காலங்களில் கரும்பு ஜூஸ் விற்பனை செய்து வரும் நிலையில், காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் சாலையில் தமிழ்நாடு ஹோட்டல் எதிரே சாலையோரமாக கரும்பு ஜூஸ் நடத்தி வருகிறார். தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்ட கோகுல் பொதுமக்கள் கவரும் வகையில் திருக்குறள் கூறிய குழந்தைகளுக்கு இலவசமாக ஜூஸ் வழங்கி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தனது கடைக்கு ஜுஸ் வாங்க வரும் குழந்தைக்கு 10 வயது உட்பட்ட குழந்தை ஒரு திருக்குறளை கூறினால் ஒரு கரும்பு ஜூஸ் இலவசம் எனவும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று திருக்குறள் கூறினால் ஒரு கரும்பு ஜூஸ் இலவசம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்த அறிவிப்பை அறிந்த பொதுமக்கள் ஆச்சரியப்பட்டு, தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்று திருக்குறளை கூற வைத்து இலவசமாக கரும்பு ஜுஸ் அருந்தி செல்கின்றனர்.
" வாசிக்கும் பழக்கம் இல்லை "
பிள்ளைகளுக்கு திருக்குறளை ஞாபகப்படுத்துவோடு இலவசமாக ஜுஸ் கிடைக்கிறது என்கின்றனர் பெற்றோர். இப்போது பெரும்பாலான மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கம் இல்லை. மாணவர்களின் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக இலவச ஜுஸ் வழங்குகிறோம். குறிப்பாக இளைய தலைமுறை பண்போடு வளர நமக்கு கிடைத்த அறநூல் திருக்குறள். எனவே திருக்குறளை வாசிக்க வேண்டும் என்பதற்காக இலவச ஜுஸ் வழங்குகிறோம் என்றார் ஜுஸ் கடை உரிமையாளர் கோகுல்.
தனிமனிதன் எடுக்கும் முயற்சிகள்
தமிழ் மொழியும் தமிழ் மொழியில் இருக்கும் இலக்கணங்களை வளர்ப்பதற்கு தமிழ் ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால் இதுபோன்று தமிழ் ஆர்வலர்கள் அல்லது ஒரு பெரிய அமைப்புகளோ எடுக்கின்ற முயற்சிகளை காட்டிலும், சாமானிய தனிமனிதன் எடுக்கும் முயற்சிகள் தான் மக்களிடம் நேரடியாக பெரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி விடும். போகின்ற போக்கில் சாமானியர்கள் எடுக்கும் இது போன்ற முடிவுகள், தமிழ் மொழிக்கும் தமிழ் படைப்புகளுக்கும் உயிர் கொடுப்பதாக அமையும் , அந்த வகையில் வியாபாரி கோகுல் எடுத்த முடிவை நிச்சயம் நாம் பாராட்டி தான் ஆக வேண்டும்.