திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. அதனை தொடந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு 5ஆம் பிரகாரத்தில் பவனி வந்தனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளினர். கடந்த 19 ஆம் தேதி அதிகாலை கோயில் கருவறை முன்பு உள்ள பிரதோஷ அறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மாலை 6 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதற்கு முன்னதாக அண்ணாமலையார் கோயிலில் உள்ள  தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியும் சிவனும் சக்தியும் ஒன்றுதான் என்று விளக்கும் வகையில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி ருத்ர தாண்டவம் ஆடிய பிறகு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சியளிக்கும். நேற்று 6-வது நாளாக மகா தீபம் சுடர்விட்டு எரிந்து காட்சி அளித்தது. மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபத்தை தரிசிக்க மலை மீது ஏறி செல்லக்கூடாது, என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பக்தர்கள் பலர் தடையை மீறி மலை ஏறி சென்று தரிசனம் செய்து வருகின்றனர். 



இந்தநிலையில் சேத்துப்பட்டு தாலுகா கங்காபுரம் கிராமத்தை சேர்ந்த துரை (30) என்பவர் நேற்று மாலை தடையை மீறி மலை மீது ஏறி சென்றுள்ளார். மலை ஏறும் அனுபவம் இல்லாததால் அவர் மகாதீபம் ஏற்றப்படும் மலை உச்சி அருகே வரை சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று இரவு மலையில் இருந்து திருப்பணி ஊழியர்கள் கீழே இறங்கி வரும் வழியில் துரை பிணமாக கிடந்ததை பார்த்து திருவண்ணாமலை நகர காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து காவல்துறையினர் மற்றும்  தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் மலை மீது ஏறி சென்று மலையின் உச்சியில் உள்ள 7 சுனை என்ற பகுதியில் இறந்து கிடந்த துரையின் பிணத்தை மீட்டு இன்று அதிகாலை 3 மணியளவில் மலை அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். 



அவரின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் விசாரணையில் இறந்த துரை ஆரணியில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனத் தெரிய வந்தது. திருவண்ணாமலை நகர காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலைமீது ஏறி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது.