மறைமலைநகர் அருகே பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட கஞ்சாவை நீதிமன்ற அனுமதியுடன், அழித்தனர்.
செங்கல்பட்டு (Chengalpattu News): தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை தடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவின் அடிப்படையில், காவல்துறையினர் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து கஞ்சாவை கைப்பற்றி அவற்றை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் எதிரொலியாக சென்னை பெருநகர போலீசார் தொடர்ந்து கஞ்சாக்களை பிடித்து அவற்றை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு கைப்பற்றப்படும் கஞ்சாக்களை ஆதாரமாக காவல்துறையினர் வைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் நீதிமன்ற அனுமதி உடன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை அழிப்பது வழக்கம்.
அந்த வகையில், இன்று சென்னை மாநகர போலீசார் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை அழிப்பதற்காக வடக்கு மண்டல இணை ஆணையர் ஆர்.வி. ரம்யா பாரதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் 68 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1300 கிலோ கஞ்சா 30 கிராம் ஹெராயன் மற்றும் பிரவுன் சுகர் உள்ளிட்ட போதை பொருட்களை அளிக்க நீதிமன்ற மூலம் உத்தரவு பெற்றனர்.
இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின்படி போதைப் பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள தென்மேல்பாக்கம், கிராமத்தில் போதை பொருட்கள் மற்றும் மருத்துவ கழிவுகளை வெளியீட்டும் நிலையத்தில் இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சென்னையில் கடந்த 5 மாதங்களில் போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட 404 வழக்குகள் தொடர்பாக 689 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்கள் விற்பனைக்குப் பயன்படுத்திய 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 5 மாதங்களில் 400 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 700-க்கும் மேற்பட்ட பொது இடங்களில் போதைப்பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இன்னும் 2,000 கிலோ போதைப் பொருட்கள் இருப்பில் உள்ளன. முறைப்படி நீதிமன்றத்தில் அனுமதி வாங்கிய பிறகு, அவை அழிக்கப்படும். தமிழகத்தில் போதைப் பொருட்களை எந்த வயதினர் அதிகம் பயன்படுத்துகின்றனர். எந்த வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு இணைந்து ஆய்வு மேற்கொள்ளும். சென்னையில் போதைப் பொருட்களை விற்ற100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்