Chennai Safety: காவல்துறையின் என்கவுன்டர் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், சென்னையில் ரவுடிகளின் அட்டகாசங்கள் குறைந்தபாடில்லை.
சட்ட ஒழுங்கு நிலை
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்த கொலைகள் பொதுமக்களிடயே அச்சத்த ஏற்படுத்தியது. மோதல், தாக்குதல் போன்ற சம்பவங்கள் காரணமாக, தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. கடந்த ஜுலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், தலைநகர் சென்னையிலேயே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சென்னை நகரம் பாதுகாப்பானதா என்ற கேள்வியும் எழுந்தது. தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக ஆளும் திமுக கூட்டண்யில் உள்ள தலைவர்களே பேசினார். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட, ஆங்காங்கே என்கவுன்டர்கள் அரங்கேறி ரவுடிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
வெடிக்கும் தோட்டாக்கள் - தொடரும் என்கவுன்டர்கள்
- கடந்த ஜுலை 14ம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்
- கடந்த செப்டம்பர் 18ம் தேதி சென்னை வியாசர்பாடி பகுதியில் மறைந்திருந்த, ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டார்
- செப்டம்பர் 23ம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான தென்சென்னை ரவுடி சீசிங் ராஜா சுட்டுக் கொல்லப்பட்டார்
- முன்னதாக, ஜுலை 11ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை, போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
இதுபோக,
- கோவையை சேர்ந்த பிரபல ரவுடி ஆல்வின்,
- சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி தூத்துக்குடி செல்வம்
- திருச்சி நடராஜபுரத்தை சேர்ந்த ரவுடி கலைப்புலி ராஜா
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அகிலன்
- அண்மையில் வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஹரி
உள்ளிடோர் போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்படுள்ளனர்.
சென்னையில் அடங்காத ரவுடிகள்
என்கவுன்டர்களுக்கு மத்தியில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளுக்கே சென்ற போலீசார் எச்சரிக்கை விடுத்து வந்தனர். இதனால், ரவுடிகளின் அட்டகாசங்கள் சற்றே தணிந்தவாறு இருந்தாலும், மீண்டும் வன்முறை சம்பவங்கள் சென்னையில் அதிகரித்துள்ளது. இதனால் ஆங்காங்கே கொலைமுயற்சி சம்பவங்களும் அரங்கேற தொடங்கியுள்ளன.
ஐயப்பன் தாங்கலில் கொலை முயற்சி
சென்னை போரூர் அருகே ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த தமிழ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும் காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரி என்ற ரவுடிக்கும் முன் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ஐயப்பன் தாங்கலில் உள்ள அருகே தனது வீட்டு அருகே தமிழ் நின்று கொண்டிருந்தபோது, சபரி தனது கூட்டாளிகளுடன் ஐந்து இரு சக்கர வாகனங்களில் வந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் தமிழ் சரிந்த நிலையில் சபரி தலைமையிலான கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர். செல்லும் வழி எல்லாம் நின்றிருந்த கார்கள், பைக்குகள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். படுகாயமடைந்த தமிழ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கல்லூரி மாணவி மீது தாக்குதல்: அண்மையில் சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீது தாக்குதல் நடத்திய, இரண்டு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெட்டிக் கொலை: கடந்த மாதம் எண்ணூர் பகுதியை சேர்ந்த தண்டனை குற்றவாளியான பாலா என்பவர், எதிரிகள் மூன்று பேரை பழிவாங்கும் நோக்குடன் ஆயுதத்துடன் சென்றுள்ளார். அப்போது, அந்த ஆயுதத்தை பறித்தே எதிர்கள் நடத்திய தாக்குதலில், பாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பழவியாபாரி கொலை: கடந்த மாதம் சென்னை திருவொற்றியூரில் மாமூல் கேட்டு தரமறுத்த பெண் வியாபாரியை, மதுபோதையில் இருந்த பர்மா சேகர் எனும் ரவுடி கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இதுபோக பல்வேறு குற்றச்சம்பவங்களும் சென்னையில் அரங்கேறி வருகின்றன. இதில் பல நிகழ்வுகளிலும் பொதுவாக இருப்பது போதை. மது மற்றும் கஞ்சா போன்ற பொருட்களின் பயன்பாடு சென்னையில் அதிகரித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. இதனால், சென்னை நகரம் பொதுமக்களுக்கு பாதுகாப்பானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. போதை ஒழிப்பை தீவிரப்படுத்தி, ரவுடிகளின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக் உள்ளது.