”சாமி இருக்குன்னு சொல்றவங்கள நம்பு, இல்லன்னு சொல்றவங்கள கூட நம்பு. ஆனால், நான் தான் சாமின்னு சொல்றான் பார், அவன நம்பவே நம்பாத. அவன்தான் ஒன்னா நம்பர் டுபாக்கூர்” என்ற பிரபல வசனத்திற்கு ஏற்றார்போல், தன்னையே சாமியாக, கடவுளாக, தெய்வீக உருவாக மக்களை நினைக்க வைத்து, பிழைத்து வரும் அன்னப்பூரணி அரசு அம்மா இப்போது 3வதாக திருமணம் செய்துக்கொண்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.


சாமியார் திருமணம் செய்துக்கொள்ளக் கூடாதா?


சாமியார் திருமணம் செய்துக்கொள்ளக் கூடாதா ? என்றால் செய்துக்கொள்ளலாம். 3வதாக திருமணம் செய்தால் தவறா? என்றால் அதுவும் இல்லை, அவர் விரும்பினால் இன்னும் 30 முறை கூட திருமணம் செய்துக்கொள்ளலாம் அது அவரது விருப்பம். அதில் தலையிட யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.  


ஆனால், தன்னை சாமி என்று கூறிக்கொண்டு மக்களை பாத சேவை செய்ய சொல்லி, பால் குடம் எடுக்க வைத்து, ஆன்மீகம் என்ற பெயரை பயன்படுத்தி, அவர்களை பணைய கைதி மாதிரி நடத்தி வருவது மட்டுமில்லாமல், இப்போது தான் 3வதாக திருமணம் செய்துக்கொண்டிருக்கும் ரோகித் என்பவரையும் வைத்து, பக்தர்களுக்கு ஆசி வழங்க திட்டம் தீட்டியிருக்கிறார் அன்னப்பூரணி அரசு அம்மா என்று பரவும் தகவலால் அவரது பக்தர்களே அதிர்ச்சியடைந்து அவர் டுபாக்கூர் சாமியாரா ? என்று விழிபிதுங்கி நிற்கிறார்கள்.


வள்ளலார் பிறந்த மண்ணில் வளரும் விஷப்பாம்புகள்


’வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற திருவருட்பிரகாச வள்ளலார் போன்ற ஆன்மீகவாதிகள் தோன்றிய இதே தமிழ் மண்ணில்தான், அன்னப்பூரணி அரசு அம்மா போன்ற ஒன்னா நம்பர் டுபாக்கூர் சாமியர்களும் தோன்றி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்றும் வாயில் இருந்து லிங்கம் எடுப்பது, மூக்கில் இருந்து தங்கம் எடுப்பது, தலையில் இருந்து தண்ணீர் வரவைப்பது என்று சித்து வேலைகளை செய்யும் இவர் போன்ற சில்லறைகளையெல்லாம் இன்னும் அப்பாவி பொதுமக்கள் நம்பி ஏமாறுவதை தடுக்க, தமிழ்நாட்டில் இன்னொரு புதிய இயக்கமே தோன்றவேண்டும் என பேசும் அளவிற்கு இவர்களது நடவடிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அப்பகுதி பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.


ஆயிரம் பெரியார் வந்தாலும்… பக்தர்கள் குமுறல்


இன்று தமிழ்நாடு தனித்து நிற்கிறது என்றால் அதற்கு பெரியார் என்ற பேராயுதம் ஒரு மிகப்பெரிய காரணம். ஆனால், “இன்னும் ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்தவே முடியாது டா” என்று நகைச்சுவையாக விவேக் சொல்லும் வசனத்தைப்போலதான், பல இடங்களில் மக்கள் இவர் போன்ற ஏமாற்று பேர்வழிகளை நம்பி, மோசம் போகின்றார்கள். இதில் படித்தவர்களும் விதிவிலக்க, படிக்காத பாமரர்களை காட்டிலும் படித்த முட்டாள்கள்தான் இவர்களுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர் என தெய்வ நம்பிக்கைக் கொண்டவர்களே முகம் சுளிக்கும் கதையாக மாறியிருக்கிறது அன்னப்பூரணியின் அலப்பறைகள்.


நடவடிக்கை எடுக்க வேண்டும்


பகுத்தறிவு, சமூக நீதி கொள்கையுடன் ஆட்சி செய்து வருவதாக தொடர்ந்து கூறி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்மீகம், பக்தி என்ற பெயர்களை வைத்து அப்பாவி மக்களை ஏமாற்றி, தங்கள் அடிமைகளாக வைத்துக்கொள்ளும் அன்னப்பூரணி அம்மா போன்ற ஒன்னா நம்பர் டுபாக்கூர் சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், உண்மையான, ஆர்ப்பாட்டமில்லாத, இறை நோக்குடன் இருக்கும் ஆன்மீகவாதிகளுக்கான மரியாதை கிடைக்கும் என இறைநம்பிக்கை கொண்டவர்கள் பேசிவருகின்றார்கள்.


இந்து சமய அறநிலையத்துறை என்ற முக்கியமான துறை மூலம் கோயில்களை நிர்வகித்து வரும் அரசு, தானே கோயில், தன் உருவமே தெய்வம் என்று சொல்லி 420 வேலை பார்ப்பவர்களுக்கு தக்கப் பாடம் புகட்ட வேண்டும் என்பதுதான் இறைநம்பிக்கைக் கொண்டவர்களின் வலியுறுத்தலாக இருக்கிறது.