Crime : டெல்லியில் இளம்பெண் ஒருவரை அவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனே தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் நடந்த கொலை வழக்கு நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் மனதை பதற வைத்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இதே போன்ற கொலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனே காதலியை கொலை செய்யும் கொடூரம் சமீபகாலமாக தொடர் கதையாகி வருகிறது.


தொடரும் கொடூரம்:


இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவரை அவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலனே தீ வைத்து எரித்து கொலை செய்த மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.


டெல்லி பல்பீர் விஹாரில் வசிப்பவர் மோஹித். அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். இருவரும் அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளர். அந்த இளம்பெண், தனது முதல் கணவரை விவாகரத்து செய்து கடந்த ஆறு ஆண்டுகளாக மோஹித்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.  


இந்நிலையில், சமீப காலமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. சில நாட்கள் அந்த பெண்ணை மோஹித் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இப்படி நாட்களுக்கு கடந்து கொண்டிருக்க ஒரு நாள் சண்டை பெரிதாக ஆனது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி மோஹித் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு பின் பக்கத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை  உட்கொண்டிருந்தார். அப்போது வேலை முடிந்த வீட்டிற்கு வந்த அந்த இளம்பெண் இதனை கண்டு ஆத்திரமடைந்தார்.


பின்னர், இதை பற்றி மோஹித்திடம் அந்த இளம்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டர். வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், மோஹித் அந்த பெண்ணை உயிருடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். 


இதனால் அலறி துடித்த அந்த பெண்ணின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  பலத்த தீக்காயம் அடைந்த அந்த பெண்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மோஹித் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்ததை அடுத்து, குற்றவாளியான மோஹித்தை மீது  வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.