டெல்லியில் உத்தம் நகர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் வாணலிச் சட்டியைப் பயன்படுத்தி திருட முயன்ற நபரைக் காவல்துறையினர் கடந்த பிப்ரவரி 13 அன்று கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 


ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா மூலமாக இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்தும், அதில் ஈடுபட்டவரைக் குறித்தும் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த வீடியோவில் அஷத் அலி என்ற நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க வாணலிச் சட்டி பயன்படுத்தி இருந்தது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் இந்த சிசிடிவி வீடியோவைக் கைப்பற்றியதோடு, அதன் பின்னர் திருட முயன்ற நபரையும் கைது செய்துள்ளது. 


இந்தத் திருட்டு முயற்சி குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணையின் போது, காவல்துறையினர் நூற்றுக்கணக்கான சிசிடிவி வீடியோக்களைப் பல்வேறு இடங்களில் சோதனை செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபரைத் தேடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து உத்தம் நகர் பகுதியில் உள்ள அஷத் அலியின் வீட்டில் அவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் இருந்த, திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட வாணலிச் சட்டியையும் கைப்பற்றியுள்ளனர். 



அஷத் அலியைக் கைது செய்த பிறகு, அவரை விசாரித்ததில் அவர் மதுவுக்கு அடிமையானவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், தான் பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும், அதன் காரணமாகவே ஏடிஎம் மையத்தில் திருட முயன்றதாகவும் தெரிவித்துள்ளார் அஷத் அலி. 


இந்திய கிரிமினல் சட்டத்தின் 380, 511 ஆகிய பிரிவுகளின் கீழ் அஷத் அலி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


மற்றொரு வழக்கில், டெல்லி காவல்துறையினர் ஏடிஎம் மையங்களைக் குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட வந்த திருட்டு கும்பல் ஒன்றைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளது. பத்லி தொழிற்பகுதியில் இருந்து ஏடிஎம் மையத்தைத் திருட இந்த கும்பல் திட்டமிட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சமய்பூர் பத்லி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள், பத்லி தொழிற்பகுதிக்குச் செல்லும் வழியில் வைத்திருந்த பொறியில் சிக்கியது இந்த கும்பல். 



சாஹிப், ஷகீல், ஆபித் என இந்த மூன்று பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், பத்லி தொழிற்பகுதிக்குச் செல்லும் வழியின் கேனல் சாலையில் காவலர்கள் திருடர்களைத் தடுக்க முயன்ற போது, கைது செய்யப்படுவதைத் தவிர்க்க குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான சாஹிப் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, காவல்துறையினரும் மூன்று முறை சுட்டதாகவும், அதில் சாஹிப் சுடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மற்ற இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.