Delhi Murder :  திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதால் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை, அவரது காதலன் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


டெல்லியில் தொடரும் கொலை:


இதைத்தொடர்ந்து, இதேபோன்ற கொலை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்வது மக்களை உச்சக்கட்ட அச்சத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ஷர்த்தா கொலை வழக்கை போலவே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை அவரது காதலனே கொலை செய்த மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


ஏப்ரல் 12ஆம் தேதி டெல்லி காரவால் நகரில் உள்ள தனியார் பள்ளி அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, உயிரிழந்த பெண் உத்தரகாண்ட் மாநிலம் மிராஜ்பரில் வசிக்கும் ரோஹினா நாஸ்(25) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.


திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஆத்திரம்


கொலை செய்யப்பட்ட பெண் ரோஹினாவும், அவரது காதலன் வினித்தும் நான்கு ஆண்டுகளாக  லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். டெல்லியில் தனியாக ஒரு வாடகை வீட்டில் வேலை செய்து வசித்து வந்தனர். இந்நிலையில்,  ரோஹினா திருமணம் செய்ய முடிவு எடுத்தார். இதுபற்றி வினித்திடம் திருமணம் செய்து கொள்வது பற்றி கேட்டுள்ளார். இதற்கு வினித் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இதனால் திருமணத்தை தள்ளி வைக்கும்படி ரோஹினாவிடம் கூறினார். 


இந்த காரணத்தால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இப்படி இருக்கும் நிலையில் தான் சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளுமாறு வினீத்தை, ரோஹினா வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரோஹினாவும் வினித்தும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வினீத் வீட்டில் ரோஹினாவை திருமணம் செய்ய எதிர்ப்பு இருந்தது. 


கழுத்தை நெரித்து கொலை


தொடர்ந்து ரோஹினா திருமணத்தை பற்றி கேட்டு சண்டையிட்ட ஆத்திரத்தில் வினித் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிந்தது. கொலை செய்ததை மறைக்க தனது தங்கை உதவியுடன் வீட்டில் இருந்து உடலை 12 கி.மீ தூரம் வரை தூக்கிச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. 


இதனை அடுத்து, போலீசார் வினீத்தின் தங்கையை கைது செய்துள்ளனர்.  அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அந்த பெண்ணை கைது செய்து, தலைமறைவாக உள்ள வினீத்தை போலீசார் தேடி வருகின்றனர். 


பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களே நடத்தி வருகிறனர். டெல்லி ஷர்த்தா கொலை சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது அதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.