நூதனமான முறை

 

துபாயில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 60.58 லட்சம் மதிப்புடைய 1.128 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இரு கால்களின் மூட்டுப்பகுதிகளில் போடப்பட்டிருந்த பேண்டேய்ட்  கட்டுக்குள், நூதனமான முறையில் தங்கப் பசையை மறைத்திருந்த  சென்னை பயணி கைது செய்யப்பட்டார்.

 

சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம்

 

துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 34 வயது ஆண் பயணி  ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் துபாய்க்கு போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவர் உடைமைகளை சோதனை நடத்தினர். உடைமைகளில் எதுவும் இல்லை.

 

கடுமையான மூட்டு வலி

 

அதன் பின்பு சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று, ஆடைகளை களைந்து சோதனை நடத்தினர். அவருடைய இரண்டு கால்களின் முட்டி பகுதியில், மருத்துவ பேண்டைடு போடப்பட்டிருந்தது. அதிகாரிகள் அது பற்றி கேட்டபோது, கடுமையான மூட்டு வலி. எனவே மருத்துவ சிகிச்சை எடுத்து, மருத்துவமனையில் போடப்பட்ட பேண்டைடு என்று கூறினார். ஆனால் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

 

ஒரு கிலோ 128 கிராம் தங்க பசை

 

 




 

அவருடைய கால் மூட்டு பகுதிகளில், போடப்பட்டிருந்த பேண்டைடுவை கழற்றிப் பார்த்தனர். இரண்டு கால் பேண்டைடுகளிலும் இரண்டு பவுச்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிரித்து பார்த்த போது அதனுள் தங்க பசை இருந்ததை கண்டுபிடித்தனர். இரண்டு பவுச்களிலும், ஒரு கிலோ 128 கிராம் தங்க பசை இருந்ததை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 60.58 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள், நூதனமான முறையில், துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த சென்னை பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.