வீட்டுப்பாடம் செய்யாததற்காக டெல்லியில் மொட்டை மாடியில் கொளுத்தும் வெயிலில் சிறுமி ஒருவர் கட்டி வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆனால் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் ஏதுமில்லை. இருப்பினும் போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அந்த வீடியோவில் அந்த சிறுமி இடைவிடாமல் அழுது கதறுவது காண்போரை பதறவைக்கிறது.


முதலில் இந்த வீடியோ காராவல் நகரில் எடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சம்பவம் கஜூரி காஸ் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அந்த வீட்டின் முகவரியை முழுமையாக கண்டறிய முடியவில்லை. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீஸார் விசாரணையை மேலும் ஆழமாக்கினர். இப்போதைக்கு அந்தக் குடும்பத்தினரின் அடையாளத்தை கண்டுபிடித்துவிட்டதாக போலீஸார் கூறுகின்றனர். அவர்களிடன் விசாரணை நடப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் வீட்டுப்பாடம் செய்யாததற்காக சிறுமியை அவ்வாறு பெற்றோர் தண்டித்துள்ளனர். ஜூவனைல் ஜஸ்டிஸ் ஆக்ட் சட்டப்பிரிவு 75ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


வீட்டுப்பாடம் செய்யக் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற சட்டமே உள்ளது. அதுவும் ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றல் திறன் வேறுபடும். 


பல பள்ளிகள் வொர்க் ஷீட்களுக்கு மாறிவிட்டன. ஆனால், ஒரு சில பள்ளிகள், இன்னமும் வீட்டுப் பாடம் கொடுக்கின்றன. மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறை, புத்தக பைகளின் சுமை ஆகியவற்றை மாநில அரசுகள் ஒழுங்குமுறைபடுத்த வேண்டும் என்ற அறிவுரை உள்ளது. ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கண்டிப் பாக வீட்டுப் பாடங்கள் கொடுக்கக்கூடாது. மேலும் மொழி, கணிதம் தவிர இதர பாடங்களைப் பரிந்துரைக்கக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்படியெல்லாம் கெடுபிடிகள் இருந்தும்கூட வீட்டுப்பாடம் செய்யாததற்காக சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


சிறார் நீதி சட்டம் என்றால் என்ன?


சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000 என்பது இந்தியாவில் சிறார் நீதிக்கான முதன்மை சட்ட கட்டமைப்பாகும். சிறார் குற்றத்தைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் ஒரு சிறப்பு அணுகுமுறையை இந்த சட்டம் வழங்குகிறது. மற்றும் சிறார் நீதி அமைப்பின் நோக்கில் குழந்தைகளின் பாதுகாப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கான கட்டமைப்பை வழங்குகிறது. 


1989 ஆம் ஆண்டில் சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கைக்கு (யு.என்.சி.ஆர்.சி) இணங்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது, 1992 ஆம் ஆண்டில் இந்தியா யு.என்.சி.ஆர்.சியில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த பின்னர் 1986 ஆம் ஆண்டின் முந்தைய சிறார் நீதிச் சட்டத்தை ரத்து செய்தது. 


இந்தச் சட்டம் 2006 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மேலும் திருத்தப்பட்டுள்ளது. டெல்லி கும்பல் பாலியல் பலாத்காரத்தை அடுத்து (16 டிசம்பர் 2012), சிறுமிகள் பலாத்காரம் மற்றும் கொலை போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் குற்றங்களுக்கு எதிரான உதவியற்ற தன்மையால் இந்த சட்டம் நாடு தழுவிய விமர்சனத்தை சந்தித்தது.