Mahakumbh: மகா கும்பமேளாவிற்கு மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் சிக்கியது எப்படி? என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மனைவி கொலை:
உத்தபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் கங்கை நதியில் புனித நீராடினால், பாவங்கள் கழிந்து புண்ணியம் கூடி மோட்சம் கிடைக்குமென நம்பப்படுகிறது. அந்த வகையில், டெல்லியின் திரிலோக்புரியைச் சேர்ந்த ஒரு தம்பதியி, மகா கும்பமேளாவைக் காண உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜுக்கு சென்றுள்ளனர். பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும், வீட்டில் உள்ள தங்களது குழந்தைகளுக்கு அனுப்பி மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் திடீரென தனது மனைவி காணாமல் போய்விட்டதாக கூறியுள்ளார். விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்தது என்ன?
பிப்ரவரி 19 ஆம் தேதி காலை, ஜுன்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆசாத் நகர் காலனியில் உள்ள ஒரு தங்குமிடத்தின் குளியலறையில் 40 வயதுடைய ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாக பிரயாக்ராஜ் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த இடம் மகாகும்ப விழாவிற்கு வரும் யாத்ரீகர்களுக்கான விருந்தினர் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. குற்றம் நடந்த இடத்தை அடைந்த போலீசார், அந்தப் பெண்ணின் கழுத்து கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் முந்தைய இரவு ஒரு ஆணுடன் விடுதிக்கு வந்ததாகவும், அவர்கள் தங்களை கணவன்-மனைவி என்று அடையாளம் காட்டிக் கொண்டதாகவும் தெரியவந்தது. விடுதி மேலாளர் எந்த அடையாளச் சான்றையும் சேகரிக்காமலேயே அவர்களுக்கு ஒரு அறையை ஒதுக்கியுள்ளார். மறுநாள் காலையில், குளியலறையில் பெண்ணின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், உடன் வந்த கணவர் மாயமாகியுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட உடல்
தொடர் விசாரணையில், அந்தப் பெண் பிப்ரவரி 18 ஆம் தேதி இரவு டெல்லியில் இருந்து பிரயாக்ராஜுக்கு தனது கணவருடன் பயணம் செய்திருப்பது தெரியவந்தது. அந்தப் பெண்ணின் புகைப்படம் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பரப்பப்பட்டு செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. பிப்ரவரி 21 ஆம் தேதி, அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவளை அடையாளம் காண முன்வந்தபோது உண்மை வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர் திரிலோக்புரியில் வசிக்கும் அசோக் குமாரின் மனைவி மீனாட்சி என அடையாளம் காணப்பட்டது. உயிரிழந்தவரின் சகோதரர் பிரவேஷ் குமார், பெண்ணின் இரண்டு மகன்களான அஸ்வானி மற்றும் ஆதர்ஷ் ஆகியோருடன் உயிரிழந்தவர அடையாளம் கண்டுள்ளனர்.
கணவனின் சதிதிட்டம்:
முன்னதாக பிப்ரவரி 17 அன்று, மகா கும்பமேளாவிற்கு போகலாம் என கூறி மனைவி மீனாட்சியுடன் அவர் டெல்லியை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள், அந்தத் தம்பதியினர் ஜுன்சியை அடைந்து ஒரு தங்குமிடத்தில் அறை முன்பதிவு செய்தனர். இரவு நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உறங்குவதற்கு முன்பு மனைவி குளியலறைக்குள் சென்றதும், அவரைப் பின்னால் இருந்து தாக்கி, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அவர் தனது ரத்தக் கறை படிந்த ஆடைகளை மாற்றி, கொலை ஆயுதத்தை அவற்றில் சுற்றி, ஆதாரங்களை அப்புறப்படுத்தியுள்ளான்.
தொடர்ந்து தனது மகன் ஆஷிஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கூட்ட நெரிசலில் மனைவி காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். கவலையுடன் நடித்து, அவளைத் தேடியதாகவும், ஆனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தனது குழந்தைகளிடம் விளக்கியுள்ளார்.
குற்றவாளி சிக்கியது எப்படி?
தந்தையின் விளக்கத்தில் சந்தேகமடைந்த மகன் அஸ்வானி, பிப்ரவரி 20 ஆம் தேதி குடும்பத்தினர் உடன் சேர்ந்து பிரயாக்ராஜிற்கு வந்து, தாயின் புகைப்படத்துடன் மகாகும்பமேளா கூட்டத்தில் அவரை தேட தொடங்கினர். இதனிடையே, போலீசார் ஆதாரங்களைச் சேகரித்து, மீனாட்சியின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் அசோக்கிடம் நடத்திய விசாரணையில் அவர் சொன்ன தகவல்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் அறிக்கைகளுடன் முரண்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
தகாத உறவால் வந்த வினை
விசாரணையில், திரிலோக்புரியில் வசிக்கும் துப்புரவுத் தொழிலாளியான அசோக்கிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. தனது மனைவியை கொன்றுவிட்டு தனது முறைகேடான உறவைத் தொடர முடிவு செய்துவிட்டு, மூன்று மாதங்களாக மனைவியைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன் முடிவாக, மகாகும்பமேளாவில் வைத்து மனைவியை கொன்றுவிட்டு, காணாமல்போய்விட்டதாக நாடகமாடியுள்ளார்.