திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றப்படும் சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி 35 வயது நபர் ஒருவர் 100 பெண்களுக்கு மேல் ஏமாற்றியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பர்கான் தஹிசர் கான்(35). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவருடைய தாய் சில ஆண்டுகளுக்கு முன்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக அவருக்கு சிகிச்சை செய்ய அதிக செலவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அதிகமாக கடன் அதிகமாகியுள்ளது. இதற்காக பணம் சம்பாதிக்க அவர் ஒரு முறையை தேடியுள்ளார். அதாவது தன்னுடைய படத்தை ஒரு திருமண தளத்தில் பதிவிட்டு 30 முதல் 40 லட்சம் பணம் சம்பாதிக்கும் பொறியியல் பட்டதாரி என்று தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்தப் பதிவை பார்த்து பலரும் ஏமாந்துள்ளதாக தெரிகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை செய்து வரும் பெண் டாக்டர் ஒருவரிடம் இவர் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் அவரிடம் தன்னுடைய தொழிலுக்கு 15 லட்சம் ரூபாய் உதவி வேண்டும் என்று கேட்டுள்ளதாக தெரிகிறது. அந்த பெண் மருத்துவர் அதை கொடுத்த பிறகு பர்கின் கான் அவரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் மீது டெல்லி சைபர் க்ரைம் பிரிவில் பெண் மருத்துவர் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்தச் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
அதன்படி கர்நாடகா,உத்தரபிரதேசம், பீகார்,மேற்குவங்கம்,குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 100 பெண்களுக்கு மேல் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் பர்கின் கான் இடமிருந்து பிஎம்டபிள்யூ கார் மற்றும் சில விலை உயர்ந்த பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி சுமார் 100 பெண்கள் வரை அவர் ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்