நாட்டின் தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் அவரது வீட்டுக்கு அருகிலேயே கடத்தப்பட்டு, மூன்று நபர்களால் காரில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மூவரில் ஒருவருடன் சிறுமி நட்பு முறையில் பழகி வந்த நிலையில், அந்நபர் டெல்லி, மகிபால்பூரில் உள்ள ஒரு கடைக்கு சிறுமியை அழைத்துச் சென்று மதுபானம் வாங்கிக் கொண்டு அப்பெண்ணையும் மதுபானம் அருந்தும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மூவர் கைது
தொடர்ந்து அந்த நபரின் நண்பர்கள் இவர்களுடன் இணைந்துகொள்ள, மூவரும் இணைந்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை பலமாகத் தாக்கியும் உள்ளனர். மேலும் சிறுமியைபாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர், சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை சார்பில் காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவர் இணைந்து திட்டமிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், சிறுமியின் வீட்டுக்கு அருகில் தங்கியிருந்த இந்த மூவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 23, 25 மற்றும் 35 வயதுடைய இந்த மூன்று நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத் சம்பவம்
முன்னதாக இதேபோல் ஹைதராபாத்தில் சொகுசு காரில் வைத்து 16 வயது சிறுமியை 5 நபர்கள் இணைந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்ட்டிக்கு சென்று திரும்பிய மாணவு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், பாதிப்புக்குள்ளான மாணவி வீடு திரும்பியதும் அவரது தந்தை மாணவியின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயம் குறித்து விசாரித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அச்சத்துடன் மாணவி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தந்தையிடம் தெரிவித்த நிலையில், அவர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமையில் பள்ளி படிக்கும் சிறார்கள் உள்பட நால்வர் ஈடுபட்ட நிலையில், சிசிடிவி மற்றும் மாணவியின் வாக்குமூலங்கள் ஆகியவைகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை அடையாளம் கண்டது. அத்துடன் சம்பந்தப்பட்ட மெர்சீடஸ் பென்ஸ் காரையும் காவல்துறை பறிமுதல் செய்தது.
வழக்கில் தாமதம்
இந்நிலையில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பாக குற்றத்தில் ஈடுபட்ட மாணவன் ஒருவர் ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏவின் மகன் என்பதால் விசாரணை முறையாக நடைபெறாமல் இழுத்தடிக்கப்படுவதாக தெலங்கானா மாநில பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்