கர்நாடகா மாநிலத்தில் தனது தந்தையின் மரணத்திற்கு தாய் தான் காரணம் என ஜோதிடர் சொன்னதால் தாயை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Continues below advertisement

ஆன்மிகத்தில் அதிக நாட்டம் இருப்பவர்கள், ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை இருப்பவர்கள் அதனை கணித்து சொல்பவர்களால் கூறப்படும் விஷயங்களை செய்ய தயங்கவே மாட்டார்கள். தான தர்மம் தொடங்கி நரபலி கொடுப்பது வரை நடந்து வருகிறது. இந்த நிலையில் பில்லி, சூனியம் போன்ற சடங்குகள் மீது ஏராளமானோருக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கையும், பயமும் உள்ளது. அப்படியான ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது. 

அங்குள்ள கர்நாடகாவின் தும்குரு மாவட்டத்தில் சுசித்ரா என்ற பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவரது தந்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திடீரென உயிரிழந்தார். தந்தை இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சுசித்ரா மிகப்பெரிய அளவில் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் ஜோதிடர் ஒருவரை அணுகி தன்னுடைய தந்தை மரணித்தது பற்றி கேட்டறிந்துள்ளார். அதற்கு அந்த ஜோதிடர், உங்கள் தாயார், சூனியம் வைத்ததால், அது நேரடியாக தந்தையின் மரணத்திற்கு வழி வகுத்தது எனவும் தெரிவித்துள்ளார்.  

Continues below advertisement

இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த சுசித்ரா, ஜோதிடர் சொன்னதை உண்மை என நம்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது தாயாரான புஷ்பவதி வீட்டுக்கு நேரடியாக சென்ற அவர், அதுபற்றி கேட்க நினைத்துள்ளார். ஆனால் சுசித்ரா சென்ற நேரத்தில் அவரின் தாய் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஒரு தலையணையை எடுத்து புஷ்பவதி முகத்தில் வைத்து அமுக்கி மூச்சுத்திணறடித்து அவரை சுசித்ரா கொலை செய்தார். 

இதனைத் தொடர்ந்து எதுவும் நடக்காதது போல தனது தாயார் இயற்கையான முறையில் மரணமடைந்து விட்டதாக குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளார். உடலை விரைவாக அகற்றினால் தான் தப்பித்து விடுவோம் என திட்டமிட்ட சுசித்ரா இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்ய தொடங்கினார். அவரது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் புஷ்பவதி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது உள்ளூர் மக்கள் சிலர் வீட்டில் இருந்த சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளை எல்லாம் கவனித்தனர். 

உடனடியாக கியட்சந்திரா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் இறுதிச்சடங்கு நடைபெறுவதற்கு முன்பாக வீட்டுக்கு விரைந்த போலீசார் சுசித்ரா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரிடமும் தீவிர விசார்ணை நடத்தினர். இதில் முதலில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறிய சுசித்ரா ஒரு கட்டத்தில் தனது தந்தை மரணத்திற்கு காரணமான தாயை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சுசித்ராவுக்கு ஜோதிடம் சொன்ன நபரை போலீசார் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் சுசித்ராவின் கணவருக்கும் பங்கு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.