மருத்துவ பரிசோதனைக்காக தன்னுடைய மகனின் ஆணுறுப்பை மருத்துவருக்கு புகைப்படம் எடுத்து அனுப்பிய தந்தையை கூகுள் லாக் செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
சோஷியல் மீடியா நிறுவனங்களும், கூகுளின் கீழ் இயங்கும் தளங்களும் தங்களுக்கென சில கொள்கைகளை பின்பற்றுகின்றன. அதன்படி குற்ற சம்பவங்கள், பாலியல் தொடர்பான கண்டெண்டுகள், கும்பல் வன்முறை, வன்முறை தொடர்பான புகைப்படங்கள் என பல விஷயங்களை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை இந்த நிறுவனங்கள் எடுக்கும். பயனாளர்கள் தடை செய்யப்பட்ட கண்டண்டுகளை பயன்படுத்துகிறார்களா என்பதை மனிதர்கள் யாருமே சோதனை செய்ய மாட்டார்கள். எல்லாமே டெக்னாலஜிதான். செயற்கை நுண்ணறிவே இந்த வேலையை செய்கிறது. நீங்கள் எதாவது தடை செய்யப்பட்ட விஷயத்தை பகிர்ந்தால் அதனை செயற்கை நுண்ணறிவு உடனடியாக கண்டுபிடித்து உங்கள் கணக்கை சம்பந்தப்பட்ட நிறுவனம் உடனடியாக தடை செய்யும். இந்த டெக்னாலஜி தற்போது தந்தை ஒருவரை தவறுதலாக சிக்க வைத்துள்ளது.
கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்தவர் மார்க். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். தன்னுடைய ஆணுறுப்பில் ஏதோ சிக்கல் இருப்பதாகவும் அது வீங்கி வலிப்பதாகவும் சிறுவன் தன்னுடைய அப்பாவிடம் தெரிவித்துள்ளான். இது குறித்து தன்னுடைய குடும்ப மருத்துவரிடம் பேசியுள்ளார் மார்க். உடனடியாக நேராக வரவேண்டாமென்றும் புகைப்படம் எடுத்து அனுப்புமாறும் மருத்துவர் கூறியுள்ளார். உடனடியாக மகனின் ஆண் உறுப்பை புகைப்படம் எடுத்த மார்க், கூகுள் நிறுவனத்தின் கீழ் செயல்படும் மெசேஜ் மூலம் மருத்துவவருக்குக் அனுப்பியுள்ளார். உடனடியாக இது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றமாக கருதிய கூகுளின் செயற்கை நுண்ணறிவு மார்க்கின் கணக்கை ப்ளாக் செய்தது. மேலும் போலீசார் விசாரணைக்கும் இந்த தகவலை தெரிவித்துவிட்டது.
இரண்டு தினங்களுக்கு பிறகு கூகுளில் தனது அக்கவுண்ட் லாக் செய்யப்பட்டதை பார்த்துள்ளார் மார்க். அதற்கு காரணமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் என்ற விளக்கத்தையும் கூகுள் தெரிவித்துள்ளது. என்ன இது எனஷாக் ஆன மார்க் அப்படி என்ன தான் செய்துவிட்டேன் என யோசித்துள்ளார். அப்போதுதான் அவரது மகன் விவகாரம் நினைவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கூகுளுக்கு விளக்கம் அளிக்க மார்க் முயற்சி செய்தும் அவரது கோரிக்கையை கூகுள் நிராகரித்துவிட்டது.
சில மாதங்களுக்கு பிறகு இந்த விவகாரம் போலீஸ் வழக்காக மார்க்கை தேடி வந்துள்ளது. நடந்த கதையை போலீசாரிடம் தெரிவித்து வழக்கில் இருந்து தப்பித்துள்ளார் மார்க். அதேவேளையில் தன்னுடைய கூகுள் கணக்கை மீட்டுத்தருமாறும் போலீசாரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். போலிசார் முயற்சித்தும்கூட மார்க்குக்கு கூகுள் கணக்கு திரும்ப வரவில்லை. அவர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்று கூகுள் குறிப்பிட்டு பஞ்சாயத்தை முடித்துவிட்டது.
இதேமாதிரியான ஒரு சம்பவம் டெக்சாஸில் நடந்தது. மகனின் மருத்துவத் தேவைக்காக அந்தரங்க உறுப்பை பெற்றோர் போட்டோ எடுக்க அது கூகுளால் தடை செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கும் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உரிய விளக்கத்தை அளித்து அந்த பெற்றோர் தப்பித்தனர்.