தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் தனிநபர் கடன் வாங்க முடிவு செய்துள்ளார். இதற்காக பல வங்கிகளில் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இவருடைய செல்போன் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் டெல்லியில் உள்ள நிதி நிறுவனம் மூலம் ரூ.10 லட்சம் கடன் தருவதாக கூறப்பட்டு இருந்துள்ளது. மேலும் அதில் ஒரு செல்போன் எண்ணும் தொடர்புக்காக கொடுக்கப்பட்டு இருந்துள்ளது.



இதையடுத்து அந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அந்த மெசேஜில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது எதிர் முனையில் பேசிய மர்மநபர் கடன் தொகையை பெற பல்வேறு கட்டணங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்தியுள்ளார்.


ஆனால் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேரவில்லை. இதனால் மீண்டும் அந்த எண்ணில் அந்த மர்மநபரை தொடர்பு கொண்டார். அப்போது மேலும் பணத்தை செலுத்தினால் கடன் தொகை தங்கள் வங்கி கணக்கிற்கு வந்து விடும் என்று மர்மநபர் தெரிவித்துள்ளார்.
 
இதன்படி பல்வேறு தவணைகளாக ரூ. 3 லட்சத்து 39 ஆயிரத்து 500-யை செலுத்தியுள்ளார் ஓய்வுபெற்ற அந்த அரசு ஊழியர் செலுத்தி உள்ளார். ஆனால் கடன் தொகை வந்து சேரவில்லை. இந்த நிலையில் அவருடைய செல்போன் எண்ணிற்கு மற்றொரு நிதி நிறுவனம் பெயரில் ரூ. 10 லட்சம் கடன் தருவதாக வந்த குறுந்தகவலின் பேரில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் பணம் செலுத்தியுள்ளார்.

இப்படி வெவ்வேறு நிறுவனங்களுக்கு ரூ. 5 லட்சம் வரை பணம் செலுத்தியும், கடன் தொகை வராததால் தன்னை மோசடி செய்துள்ளனர் என்பதை அவர் அறிந்தார். இதுகுறித்து தஞ்சை சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொபு) ராம்தாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஏமாறாதீங்க... விழிப்புணர்வு தேவைங்க


இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ”ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம். அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிபபுணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர்” என தெரிவித்தனர்.