தமிழ்நாட்டில் இளைஞர்கள், இளம்பெண்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களின் படங்களை உறவினர்களுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டி வருகிறது ஒரு வடமாநில கும்பல். இதுகுறித்து தினமும் சைபர் குற்ற காவல்துறைக்கு புகார்கள் வருவதால், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


ஆன்லைனில் மோசடியாக பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ஏடிஎம் கார்டு விவரங்களை பெற்று வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை முழுமையாக பறிக்கும் சம்பவங்கள் அறங்கேறின.


இதுதொடர்பாக மக்கள் மத்தியில் சைபர் கிரைம் போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக அத்தகைய குற்றங்கள் சற்று குறைந்தது. இதற்கிடையே, வெளிநாட்டில் இருந்து பல கோடி பரிசு கிடைத்துள்ளது என்றும் குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்யும் சம்பவங்களும் நடைபெற தொடங்கியுள்ளது. அதிக சம்பளத்தில் வேலை தருகிறோம் என்றும், வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என்றும், ஏமாற்றுகின்றனர். 


இந்நிலையில், வட மாநிலத்தை சேர்ந்த கும்பல், இக்குற்றத்தில் ஈடுபடுவது தற்போது தெரிய வந்துள்ளது. செல்போன் மூலம் நபர்களுக்கு மெசேஜ் அனுப்பி உரையாடி, நன்கு அறிமுகமானவர் போல் பழகுகின்றனர். பிறகு அவசரத்திற்கு கடன் வேண்டும் என்றால், குறிப்பிட்ட செயலியை உள்ளீடு செய்யுங்கள் எனக்கூறி அனுப்பி வைக்கின்றனர். 


அந்த செயலிக்குள் சென்று பதிவு செய்தால், போனில் உள்ள அனைத்து விவரங்களையும் அவர்கள் திருடி விடுகிறார்கள். போனில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து செல்போன் எண்களையும், போனில் உள்ள படங்கள், வீடியோக்களையும் அம்மோசடி கும்பல் திருடுகின்றனர். பின்னர், ரூ.5 முதல் ரூ.15 ஆயிரம் வரையில் கடன் கொடுக்கின்றனர். இந்த கடன் தொகையை ஒரு வாரத்தில் திரும்ப செலுத்த வேண்டும் எனக்கூறி வசூல் செய்கின்றனர்.


கடனே பெறாத நிலையில், மோசடி நபர்கள் அனுப்பிய செயலியில் உள்ளீடு செய்தவர்களுக்கு வேறு வகையில் மிரட்டல் விடுத்து பணம் பறிக்கின்றனர். அதாவது, செயலியை பயன்படுத்திய இளசுகளின் புகைப்படங்களை எடுத்து, நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களில் தலையை மட்டும் மார்பிங் செய்து அவர்களுக்கே முதலில் அனுப்புகின்றனர். 


இதையடுத்து, பெற்றோர், உறவினர்களின் எண்களுக்கும், நண்பர்களின் எண்களுக்கும் அனுப்பி பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இத்தகைய சைபர் குற்றத்தில் சிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


அந்த வகையில், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே புளியம்பட்டியை சேர்ந்த விஷ்ணுபிரியன் (25) என்ற எலக்ட்ரீசியன் நேற்று அம்மாவட்ட எஸ்பி அலுவலகம் சென்று சைபர் குற்ற போலீசில் புகார் கொடுத்தார். இதேபோல், கடந்த சில நாட்களில் மட்டும் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசுக்கு 15க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. 


இளம்பெண்களை ஆபாசமாக சித்தரித்து உறவினர்களுக்கே அனுப்பி வைத்திருப்பதால் கண்ணீர் விட்டு கதறியபடி படத்தை முதலில் நீக்க நடவடிக்கை எடுங்கள் என போலீசில் தெரிவித்துள்ளனர். இப்புகார்கள் பற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில், இம்மோசடியில் உபி, மேற்குவங்கத்தில் இருக்கும் நபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அக்கும்பல் பற்றி தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


சேலம் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘இம்மாதிரி மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் போனில் பேசியிருக்கிறோம். அவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக இருக்கின்றனர். காரணம், அனைத்தும் போலியான முகவரியில் மோசடி வேலையில் ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கணவருடன் ஒரு இளம்பெண் வந்து புகார் கொடுத்தார். அந்த பெண்ணை மிகவும் அசிங்கமாக சித்தரித்து அவரது உறவினர்கள் அனைவருக்கும் படமாக அனுப்பி வைத்து மிரட்டியுள்ளனர். அக்கும்பலை பற்றி விசாரித்தபோது, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,’’ என்றனர்.


மாநிலம் முழுவதும், தங்களின் படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக சைபர் கிரைம் போலீசுக்கு இதுவரை 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. புகார் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள், 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அவசரத்திற்கு ரூ.1000, ரூ.2000 கடன் கிடைக்கிறது என ஆப்களில் கடன் பெறுகின்றனர். அவர்களே இத்தகைய மோசடி கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர். அதனால், யாரும் முன்பின் தெரியாத நபர்களிடம் செல்போன் வாட்ஸ்அப்களில் உரையாடுவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் அனுப்பும் கடன் ஆப்களை உள்ளீடு செய்யக்கூடாது என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்ைக விடுத்துள்ளனர். மேலும், ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.