செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் ராணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் ( Instagram )  செயலில் தன்னுடைய போட்டோக்களை அப்லோடு செய்துள்ளார். இந்நிலையில் மர்மநபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் இருந்த இவரது புகைப்படத்தை எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் அக்கவுண்டை துவங்கி போலியான பெயரில் இந்தப்படங்களை பதிவிட்டுள்ளார்.

 




நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் இந்த விவரம் தெரியவந்ததும் அந்தப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். அந்தப்புகாரில், ' தன்னுடைய Instagram- ல் உள்ள புகைப்படத்தை எடுத்து ஆபாசமாக சித்தரித்து யாரோ மர்ம நபர் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 







செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சிவக்குமார், காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் தீவிர விசாரனை மேற்கொண்டனர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட முனீஷ்வரன் (33) என்பவரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்தப்பெண்ணின் புகைப்படத்தை இன்டர்நெட் மூலம் எடுத்து ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டத்தை ஒப்புக்கொண்டார்.



இதனையடுத்து முனீஸ்வரன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொண்டுள்ளனர்.