புதுச்சேரி: காரைக்காலைச் சேர்ந்த சோழன் (65) என்பவர் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற இணைய வழி மோசடிக்காரர்களின் ஆசை வார்த்தையை நம்பி ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் பணத்தை இழந்தார்.
புதுச்சேரி காரைக்காலைச் சேர்ந்த சோழன் வயது 65 என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட இணை மோசடிக்காரர்கள் உங்களுக்கு ஆன்லைன் மூலமாக நாங்கள் டிரேடிங் எப்படி செய்வது என்று சொல்லிக் கொடுக்கிறோம் என்று கூறி இணைய வழியில் தொடர்பு கொண்ட நபர்கள் அவருக்கு டிரேடிங் எப்படி செய்வது என்பது பற்றி கடந்த வருடம் பத்தாவது மாதம் சொல்லிக் கொடுத்தனர். மேலும் அவர்கள் யூடியூப் youtube பல்வேறு லிங்குகளை அனுப்பி பல வீடியோக்களை பார்க்க சொல்லி இருக்கின்றனர். அந்த வீடியோவில் பணம் முதலீடு செய்கின்ற நபர்களுக்கு 15 நாட்களிலேயே அவர்கள் போடுகின்ற பணம் இரட்டிப்பாக வந்தது போல் அனைத்து வீடியோக்களும் இருந்ததாக கூறினார். மேலும் டிரேடிங் செய்வது சம்பந்தமாக சில நபர்கள் அவருக்கு ஆன்லைன் மூலமாக சொல்லிக் கொடுக்கும் பொழுது அவருக்கு நிறைய லாபம் வருவது போல் காட்டி இருக்கின்றனர்.
அதை நம்பியவர் அவர்கள் போலியாக உருவாக்கி அனுப்பிய டிரேடிங் வெப்சைட்டில் ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்திய பிறகு கடந்த இரண்டு மாதங்களாக எந்த லாபமும் அவருக்கு வரவில்லை. அதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் நேற்று புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது சம்பந்தமாக ஆய்வாளர் கீர்த்தி மற்றும் தலைமை காவலர் இருசவேல் ஆகியோர் விசாரணை செய்து அவர் பணம் செலுத்திய 10க்கும் மேற்பட்ட வங்கி கணக்கை முடக்கி உள்ளனர்.
இது சம்பந்தமாக இணைய வழி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கரன் பொதுமக்களுக்கு கூறியதாவது: இணைய வழியில் வருகின்ற முதலீடு, வேலைவாய்ப்பு, வரன் தேடுதல், ஒரே நாளில் 10% வருமானம், குறைந்த விலையில் பொருட்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, பழைய பொருட்களை குறைந்த விலைக்கு தருகிறோம், உங்களுடைய கிரெடிட் கார்டில் கடன் வாங்கும் தொகையை அதிகரிக்கிறோம், செல்போன் டவர் அமைக்க இடம் வேண்டும், இலவசமாக ஆன்லைனில் டிரேடிங் செய்ய சொல்லிக் கொடுக்கிறோம் போன்ற இணைய வழியில் வருகின்ற எதையுமே நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.