தஞ்சாவூர்: ஆன்லைனில் டாஸ்க்குகளை முடித்தால் அதிக லாபம் பார்க்கலாம் என்று கூறி தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் ரூ.27.75 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
டாஸ்க் செய்யுங்க... வருமானம் குவியும் என மோசடி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்துக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்போன் எண்ணிற்கு டெலிகிராம், வாட்ஸ் ஆப் செயலிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் உணவகங்களுக்கு மதிப்பீடு செய்து இணையத்தில் வெளியிடுவது போன்ற பல டாஸ்க்குகளை நிறைவேற்றினால் அதிக வருமானம் கிடைக்கும்.
இதற்கு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். பின்னர் டாஸ்க்களை முடித்தால் லாபம் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டு இருந்தது. இதை நம்பிய அப்பெண் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது எதிர் முனையில் பேசிய மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 27.75 லட்சம் செலுத்தி உள்ளார்.
லாபத் தொகையும் கிடைக்கலை... கட்டின பணமும் கிடைக்கலை
இவ்வளவு தொகை செலுத்திய பின்னரும் எவ்வித லாபத்தொகையும் அந்த பெண்ணிற்கு கிடைக்கவில்லை. இதனால் அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பார்த்துள்ளார். ஆனால் செல்போன் சுவிட்ஸ் ஆப் என்று வந்துள்ளது.
இதையடுத்து அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். இதன்பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.