புதுச்சேரி : இணைய வழியில் அறிமுகமாகி அமெரிக்க டாலரை மார்க்கெட் மதிப்பை விட குறைவாக தருகிறேன் என்று கூறியதை நம்பி 21,50,000/-ரூபாய் பணத்தை இழந்த புதுச்சேரி தொழிலதிபர்.
தொழிலதிபர்:
புதுச்சேரி ஆனந்த ரங்கபிள்ளை நகரை சேர்ந்த ஜெயரட்சகன் (வயது 46 ) என்பவர் இங்கிலாந்தில் உள்ள நிறுவனத்தில் பணி செய்துவிட்டு தற்போது புதுச்சேரியில் தங்கி ஆன்லைனில் முதலீடு செய்து வருகிறார். அவர் கடந்த மாதம் கிரிப்டோ கரன்சி வாங்குவதற்காக பினான்ஸ் என்ற நிறுவனத்தில் அமெரிக்க டாலர்களை வாங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது வாட்ஸப்பில் வந்த நபர் நான் தென்னிந்தியாவிற்கான பினான்ஸ் கம்பெனியின் நிர்வாகி உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் என்று வாட்ஸ் அப் காலில் பேசவே அதை நம்பிய ஜெயரட்சகன் பத்தாயிரம் அமெரிக்க டாலர் வேண்டும் என கேட்டு இருக்கிறார்.
21 லட்சம் அபேஸ்:
அப்போதைய மார்க்கெட் ஒரு டாலரின் மதிப்பு 88 ரூபாய் என்று இருந்த போது மேற்படி தொடர்பு கொண்ட மர்ம நபர் 85 தருகிறேன் என்று கூறியது நம்பியுள்ளார். பினான்ஸ் நிறுவனத்தை பற்றி பல்வேறு தகவல்களையும் கூறவே அதை நம்பிய ஜெயரட்சகன் பல்வேறு தவணைகளாக மொத்தம் 21 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் சொன்ன 4 வங்கி கணக்குகளுக்கு அனுப்பி விட்டார். பணத்தை அனுப்பி ஒரு மாதமாகியும் புகார் தாரரான ஜெயரட்சகனுக்கு எந்த அமெரிக்க டாலரும் வந்து சேராதால் ஏமாந்ததை உணர்ந்த அவர் என்று இணைய வழி காவலில் வந்து புகார் கொடுத்தார். அது சம்பந்தமாக காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
குற்றவாளிகள் கைது
வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பிடிப்பதற்காக சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர்கள் கார்த்திகேயன் மற்றும் கீர்த்தி தலைமையில் காவலர்கள் மணிமொழி, சதீஷ், வினோத் மற்றும் பெண் காவலர் ரோஸ்லின் மேரி ஆகியோர்களைக் கொண்டு தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேற்படி குற்றவாளி சுகாஷ் மற்றும் அவரது நண்பர் சித்தார்த தாவணிகரை மாவட்டம் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
மேற்கண்ட இருவருமே IT இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும். உடனடியாக தனிப்படை பெங்களூர் விரைந்து சுகாஷ் மற்றும் சித்தார்த்தை கைது செய்தனர். மேலும், குற்றவாளிகளிடம் இருந்து 6 மொபைல் போன், 20 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் லேப்டாப், ஐந்து வங்கி கணக்கு புத்தகங்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு நபர்களையும் புதுவை தலைமை குற்றவியல் நீதிபதி திரு மோகன் முன்பு ஆயர்படுத்தி சிறையில் அடைத்தனர். கர்நாடகாவை சேர்ந்த மோசடி நபர்கள் இதேபோன்று பல்வேறு நபர்களிடம் ஏமாற்றி இருக்ககூடும் என்ற கோணத்திலும் புதுச்சேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றார். அவர்களுடைய பல்வேறு வங்கி கணக்குகளைமுடக்கி எவ்வளவு பணம் உள்ளது , பணம் எங்கிருந்து வந்துள்ளது என்பதையும் விசாரிக்க எஸ்பி பாஸ்கரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி இணைய வழி காவல்துறை விழிப்புணர்வு
மேலும் இது சம்பந்தமாக இணைய வழி காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் கூறியதாவது கடந்த 9 மாதங்களில் மட்டும் 22 கோடி அளவிற்கு புதுச்சேரியில் மக்கள் இணைய வழி மோசடிக்காரர்களிடம் இழந்து உள்ளனர் என்றும் இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம், மார்க்கெட் விலையை விட அதே பொருளை 20% குறைந்த விலையில் கொடுக்கின்றோம் என இணைய வழியில் யாராவது தொடர்பு கொண்டால் அவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும், OLX போன்ற பொருட்களை வாங்குகின்ற விற்கின்ற தலங்களில் நிறைய மோசடிகள் நடந்து வருவதால் அதில் பொருட்களை வாங்கும் பொழுது அல்லது விற்கும் பொழுதோ எந்த உத்தரவாதமும் இல்லாமல் முன் பின் பழக்கம் இல்லாத தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.