சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ். பெங்களூரில் கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி, கடந்த 15 ஆம் தேதி மாலையில் இருந்து காணவில்லை என அவரது கணவர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் தாரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்வியை தேடி வந்தனர். இந்த நிலையில், காவல்துறையினர் விசாரணையில் பசுவராஜ் மற்றும் செல்வி இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை என்பதால் அவர் அவ்வப்போது கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருவார் எனத் தெரிய வந்தது. இந்த நிலையில் சேலம் மாநகர் இரும்பாலை காவல் நிலையத்தில் பெருமாம்பட்டி பகுதியில் உள்ள முள்ளனேரி பெரியாண்டிச்சி கோயிலுக்கு பின்புறத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற இரும்பாலை காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



விசாரணையில் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வியின் சடலம் என்பது தெரியவந்தது. உடனடியாக தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் செல்வி குழந்தை பாக்கியம் இல்லாததால் அவ்வப்போது பெரியாண்டிச்சி கோயிலுக்கு வந்து பரிகாரம் செய்வது வழக்கம் என்றும், இதனால் அங்கிருந்த கோயில் பூசாரி குமாருக்கும் செல்விக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி காலை 11 மணி அளவில் செல்வியை பெரியாண்டிச்சி கோயிலுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என குமார் அழைத்துள்ளார். அப்போது செல்விக்கு கொடுக்கப்பட்ட குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.


இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக பெரியாண்டிச்சி கோயில் பூசாரி குமாரை கைது செய்தனர். மேலும் எதற்காக பூசாரி குமார், செல்வியை கொலை செய்தார்? செல்வியின் உடலில் காயங்கள் உள்ளதால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா? பூசாரிக்கு சயனைடு எப்படி கிடைத்தது? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.