ஆளுநர் ஆர்.என்.ரவியால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீதான தனித்தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 10 சட்ட மசோதாக்கள் மீதான தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். முன்னதாக சட்டப்பேரவையில் இருந்து மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே பாஜக, அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் இன்று மாலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் அடுத்தக்கட்ட விசாரணை நாளை மறுநாள் (நவம்பர் 20) நடைபெற உள்ள நிலையில், சட்ட மசோதா விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன முடிவு எடுக்கப்போகிறார், நீதிமன்றம் சொல்லப்போவது என்ன என பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.