சிங்கப்பூர், இலங்கை, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து,3  விமானங்களில் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.1.32 கோடி மதிப்புடைய 2.5 கிலோ தங்க பசை, நகைகளை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து,4  பெண்கள் உட்பட 5  பேரை கைது செய்து விசாரணை.

 

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம்

 

இலங்கையில் இருந்து இண்டிகோ  ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இலங்கையைச் சேர்ந்த 2 பெண்கள் சுற்றுலாப் பயணிகள் விசாக்களில், இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்திருந்தனர். அவர்கள் மீது சுங்க  அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்களை பெண் சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தனர். அந்த இரு பெண்கள், ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ 42 கிராம் தங்க பசையை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 55.36 லட்சம். இதை அடுத்து சுங்கத்துறையினர் இரு இலங்கை பெண்களையும், கைது செய்தனர்.

 

இரண்டு இளம் பெண்கள் கைது

 

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர். அந்த விமானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு இளம் பெண்கள், சுற்றுலாப் பயணிகள் விசாவில் சிங்கப்பூருக்கு போய்விட்டு திரும்பி வந்திருந்தனர். அவர்களை சுங்க அதிகாரிகள் சந்தேகத்தில் சோதனை இட்டனர். அவர்கள் கைப்பைகளில் மறைத்து வைத்திருந்த புத்தம் புதிய தங்க நகைகள், 700 கிராம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தங்க நகைகளின் மதிப்பு ரூ. 37.19 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்த இரண்டு இளம் பெண்களையும் கைது செய்தனர்.

 

பறிமுதல் செய்யப்பட்ட தங்க பசை

 

இதற்கிடையே துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 34 வயது ஆண் பயணி ஒருவர் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலில் 745 கிராம் தங்க பசை இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். அவைகளின் சர்வதேச மதிப்பு ரூ. 39.58 லட்சம். இதை அடுத்து கடத்தல் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

 

ஐந்து பேர் கைது

 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய தொடர் சோதனைகளில், சிங்கப்பூர், இலங்கை, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து, சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ. 1.32 கோடி மதிப்புடைய 2.5 கிலோ, தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து,2 இலங்கை பெண்கள் உட்பட4  பெண்கள், மற்றும் ஒரு ஆண் பயணி ஆகிய 5 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்துகின்றனர்.