அபுதாபியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 95 லட்சம் மதிப்புடைய 1.8 கிலோ தங்க உருளையை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம்
அபுதாபியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி, சுற்றுலா விசாவில் அபுதாபிக்கு போய்விட்டு திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
முன்னுக்குப் பின் தகவல்
இதை அடுத்து அந்தப் பயணியை நிறுத்தி வைத்து, விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதை அடுத்து அவருடைய உடைமைகளை முழுமையாக சோதித்தனர். அதோடு அவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து சோதனை நடத்தினர். அந்த சோதனைகளில் எதுவும் சிக்கவில்லை.
நூதன முறையில் கடத்திவரப்பட்ட தங்கம்
ஆனாலும் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் தீரவில்லை. அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்திருந்த, ஒவ்வொரு பொருளையும் ஆய்வு செய்தனர். அப்போது மின் மோட்டார் ஒன்று வெளிநாட்டில் இருந்து, இவர் வாங்கி வந்திருந்தார். அதிகாரிகள் அந்த மின்மோட்டாரை கழற்றி பார்த்து ஆய்வு செய்தனர். அந்த மின்மோட்டாருக்குள், தங்க உருளை ஒன்று மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்தத் தங்க உருளை 1.8 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு, ரூபாய் 95 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் கடத்தல் பயணியை கைது செய்தனர். தங்க உருளையை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்