சிதம்பரத்தில் போலிச் சான்றிதழ் தயாரித்ததாக அண்ணாமலை பல்கலைக்கழக அதிகாரி புகார் அளித்த நிலையில், தீட்சிதர் உள்ளிட்ட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் சிதம்பரம் ஏஎஸ்பியிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பல்கலைக்கழகம் பெயரில் போலிச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.




அதன் பெயரில் தனிப்படை போலீசார் ஏஎஸ்பி உத்தரவின் பேரில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அதில் போலியான கல்விச் சான்றிதழ்கள் தயாரித்ததாக இருவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த சங்கர் தீட்சிதர் (39) மற்றும் மீதிகுடி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த நாகப்பன் (50) ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.


இதையடுத்து மேல் விசாரணைக்காக அவர்கள் இருவரும் கிள்ளை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவிலேயே எவ்வளவு சான்றிதழ் அச்சடிக்கப்பட்டது. யார் யாருக்கு வழங்கப்பட்டது என்பன போன்ற விவரங்கள் தெரிய வரும் என கூறப்படுகிறது.