கடலூர் அருகே நடு ரோட்டில் ரவுடி ஓட ஓட வெட்டப்பட்ட சம்பவத்தில்  நான்கு பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

புதுச்சேரி மாநிலம் அருகே உள்ள ஆரோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(28). கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எம்.புதுப்பாளையத்தில் மாமியார் வீட்டில் தங்கியிருந்த ரவடி ஜெயபிரகாஷை மர்மகும்பல் ஓட ஓட வெட்டியது. இதனால் படுகாயம் அடைந்த ஜெய பிரகாஷ் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



 

இச்சம்பவம் தொடர்பாக பண்ருட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ரவுடி ஜெயபிரகாஷ் சிறையில் இருக்கும் பொழுது வில்லியனூரை சேர்ந்த ஒருவருடன் மோதல் ஏற்பட்டதால். ஜெயபிரகாஷ் கோஷ்டிக்கும், புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த மற்றும் ஒரு  கோஷ்டிக்கும் முன் விரோதம் இருந்ததாகவும், இதனால் ஜெயபிரகாஷின் எதிர் கோஷ்டியை சேர்ந்தவர்கள் இவரை பின்தொடர்ந்து வந்து பண்ருட்டி அருகே வெட்டியதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

 

இதன் அடிப்படையில் விசாரணையை முடுக்கிய காவல்துறையினர் ஜெயபிரகாஷ் வெட்டப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய வில்லியனூரை சேர்ந்த வினோத் (25), நூதேஷ் (21), கிஷோர் (20), சந்துரு (20) ஆகிய 4 இளைஞர்களை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர். ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.