கடலூர் தலைமை தபால் நிலையம் பகுதியில் கடந்த மாதம் 28 ஆம் தேதி நள்ளிரவு 21 வயது பெண்ணொருவர் பேருந்து நிறுத்தத்தில் தனியாக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) அரோக்கியராஜ் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர், தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவல்துறையினர் சென்று பார்த்த போது அழுது கொண்டிருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தகவலை காவல்துறையினரிடம் அந்த பெண் கதறி அழுது கொண்டே தெரிவிக்கையில், கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் தனது காதலனுடன் பாழடைந்த வீட்டில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, மூன்று வாலிபர்கள் திடீரென்று உள்ளே நுழைந்தார்கள். அப்போது எங்களிடம் ரகளை ஈடுபட்டனர். பின்னர் என்னையும் எனது காதலனையும் ஒன்றாக சேர்த்து வைத்து செல்போனில் படம் பிடித்து வெளியில் காண்பித்து விடுவோம் என மிரட்டினர்.
பின்னர் திடீரென்று எனது காதலனை இரண்டு நபர்கள் வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்டனர் எனவும், இதனால் நான் பெரும் அதிர்ச்சி அடைந்து தப்ப முயற்சி செய்தேன் . பின்னர் ஒரு நபர் நான் எவ்வளவோ தடுத்தும், கதறி கெஞ்சிய போதும் என்னை வலுக்கட்டாயமாக என் காதலன் முன்பு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனை தொடர்ந்து காதலன் செல்போனையும் பிடிங்கிக் கொண்டனர். பின்னர் மூன்று பேரும், என்னையும் என் காதலனையும் மிரட்டி, இந்த நடந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் யாரிடமும் கூறக்கூடாது என கூறி அனுப்பி வைத்தாக கதறி அழுது கொண்டு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு பெண்ணை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் பெண்ணின் காதலனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மூன்று நபர் யார் என தெரியவில்லை என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதியில் சந்தேகப்படும் நபர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், 3 வாலிபர்களை காவல் துறையினர் பிடித்து வந்து காதலனிடம் காண்பித்தனர். அப்போது காதலியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று நபர்கள் இவர்கள் என அடையாளம் காண்பித்தார். மேலும் காதலனிடம் இருந்து பறித்த செல்போன் ஒரு நபரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதை அடுத்து திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தி கிஷோர், சதீஷ், ஆரிப் ஆகிய 3 வாலிபர்களை பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், காவல் துணை கண்காணிப்பாளர் காரிகால் பாரிசங்கர் ஆகியோர் அந்த 3 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதை அடுத்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேர் மீது வழிப்பறி, கொலை மிரட்டல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது அவர்கள் மீது ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக்காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் எதிரிகள் ஓராண்டு குண்டர் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்கள் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.