கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்து உள்ள மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது பாரூக் (42). இவர் கடந்த சில ஆண்டுகளாக குவைத் நாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பினார். இவருக்கு 15 வயதில் ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகளும் என இரு மகள்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் முகமது பாரூக் அவர்களின் மனைவி கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து உள்ளார். எனவே, அவரது மகள்கள் இருவரையும் தனது அரவணைப்பில் தந்தையான முகமது பாரூக் வளர்த்து வந்தார். மேலும், முகமது பாரூக் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் வேலைக்கு செல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வந்து உள்ளார். இந்நிலையில், முகமது பாரூக்கின் இளைய மகளான 15 வயது மகள் நேற்று இரவு கடலூர் அனைத்து மகளிர் காவலநிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார் அதனை கேட்ட அங்கிருந்த காவல் துறையினர் அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அந்த சிறுமி அளித்த புகாரில், தனது தந்தையான முகமது பாரூக் கடந்த ஒரு வருடமாக வீட்டில் இருந்த தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகாரினை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் புகாரின் பேரில், உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகேஷ்வரி வழக்குப் பதிவு செய்தனர், பின்னர் நேற்று இரவே அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் மேல்பட்டம்பக்கம் விரைந்து முகமது பாரூக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சமீப காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பல குற்ற வழக்குகள் விசாரிக்கப்பட்டு அடுத்தடுத்து தீர்ப்பு அளித்தது இதில் பெரும்பாலானவை பாலியல் குற்றங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.