திட்டக்குடி அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் என்பவரின் மகன் செந்தில் (46). அரசு ஒப்பந்ததாரர் ஆன இவர் ஊராட்சி ஒன்றியங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு செந்தில் அவரது வீட்டின் முன்றம் உள்ள ஹாலில் குடும்பத்துடன் படுத்து தூங்கினார். பின்னர் நேற்று காலையில் செந்தில் மனைவி ராஜேஸ்வரி (40) எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவுகள், படுக்கை அறையின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.




பின்னர் அவர், படுக்கை அறைக்குள் சென்று பார்த்த போது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த துணி மணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 19 பவுன் நகைகளை காணவில்லை.  செந்தில் அவரது குடும்பத்துடன் வீட்டின் முன் பக்க ஹாலில் படுத்து தூங்கியதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. இது மட்டும் இன்றி கொள்ளை போன நகைகளின்  மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 




இது குறித்து ஆவினங்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் கூப்பர்  கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அங்கு உள்ள மெயின் ரோடு வரை ஓடி நின்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.




இந்த நிலையில் திட்டக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த நபர் மீது 10 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் மற்றொரு நபர் தீவிர காயங்கள் உடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இந்த சூழலில் அரசு ஊழியர் வீட்டிலேயே நடைபெற்று உள்ள இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.