கணவனை கண்டித்த மனைவியை சித்ரவதை செய்த கணவருக்கு, கீழமை நீதிமன்றம் வழங்கிய 6 மாத சிறை தண்டனையை சென்னை மாநகர 2-வது கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் ஷோபா. இவருடைய கணவர் மதுக்கர் துக்கிரில்லா. இவர் இஞ்சினியராக பணிபுரிகிறார். இருவருக்கும் 1987-அம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கும் ஒரு மகள், மகன் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் வேலைப் பார்த்த மதுக்கர் துக்கிரில்லா, 2002-ஆம் அண்டு சென்னை திரும்பினார். இவர்கள் எழும்பூருக்கு அருகில் உள்ள சேத்துப்பட்டில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினர். இந்த நிலையில், மதுக்கர் துக்கிரில்லா சாய்பாபாவின் மீது நம்பிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. வாழ்வின் இன்னல்களை இல்லாமல் ஆக்கும் சக்தி சாய்பாபாவிற்கு இருப்பதாக நம்பியவர், அவர் காட்டும் வழியில் வாழ்க்கையை வாழ முடிவு செய்தார்.
இதையெடுத்து தனது வீட்டிலேயே புட்டபர்த்தி சாய்பாபா என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி நடத்தி வந்தார். சாய்பாபாவின் பக்தி மார்க்கத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு பக்தி மார்க்க விழாக்களை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளைக்கு பெண்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மனைவியும், தன் கணவர் நல்வழியில் பலருக்கும் தங்கள் வாழ்வில் கடவுளை கண்டடைய உதவுவதாக நினைத்து கொண்டார். ஆனால், அவர் மனைவியின் நம்பிக்கை உடையும் நாள் வந்துள்ளது.
இவ்வாறு வரும் பெண்களிடம் பூஜை செய்வதாக கூறி மதுக்கர் துக்கிரில்லா, பல பெண்களுடன் தனிமையில் இருந்துள்ளதாக தெரிகிறது. மேலும், பல பெண்களுடன் வெளியே ஜாலியாக சுற்றித் திரிந்துள்ளார். இதுபற்றி மனைவிக்கு தெரியவந்ததும் கணவரை கண்டித்துள்ளார். ஆனால் பெண்களுடனான தொடர்பை கைவிடாததால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த மதுக்கர் துக்கிரில்லா, தனது மனைவியை அடுத்துள்ளார். பின்னர், மனைவியை அடிப்பது வழக்கமாகியுள்ளது. இதுகுறித்து ஷோபா, கடந்த 2005ம் ஆண்டு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து மதுக்கர் துக்கிரில்லாவை கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இந்த வழக்கு எழும்பூர் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 23ம் அளிக்கப்பட்ட தீர்ப்பில், மதுக்கர் துக்கிரில்லாவுக்கு 6 மாத சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை மாநகர 2வது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் மதுக்கர் துக்கிரில்லா மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் என்.மருதுகணேஷ் ஆஜராகி, மதுக்கர் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தியுள்ளார் என்று வாதிட்டார். இதன் அடிப்படையில், 2வது கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ப்ளோரா ‘கீழமை நீதிமன்றம் வழங்கிய 6 மாத சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுக்கர் துக்கிரில்லா தற்போது சிறையில் உள்ளார்.