நெல்லை டவுண் பெரிய தெரு பகுதியில் வசித்து வருபவர் கோமதி. 82 வயதான மூதாட்டி கோமதியின் கணவர் ராமசாமி என்பவர் மின்வாரியத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற நிலையில் ராமசாமியும், அவரது மகனும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மூதாட்டி கோமதி நெல்லை டவுண் பெரிய தெரு பகுதியில் தனியாக வசித்து வருகிறார். படுத்த படுக்கையாக எழுந்து கூட  நடக்க முடியாத இவருக்கு இவருக்கு அக்கம் பக்கத்து வீட்டினர் அவ்வப்போது உதவி செய்து வருகின்றனர். இருப்பினும் மூதாட்டியிடம் சுமார் 25 பவுன் தங்க நகைகள் இருந்துள்ளது.  இந்த நிலையில் வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து வந்த மர்ம நபர் ஒருவர் கடந்த 19 ஆம் தேதி மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்து பின் திடீரென வீட்டின் முன்பக்க கதவை அடைத்து விட்டு மூதாட்டி அருகே இருந்த தலையணையை எடுத்து முகத்தில் வைத்து அமுக்கி உள்ளார்.


இதனை தடுக்க முடியாமல் மூதாட்டி திணறிய நிலையில் நகைகளை கொடுக்கும்படி மர்ம நபர்கள் மிரட்டிய போது மூதாட்டி உயிர் பயத்தில் நகைகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள் என்னை விட்டு விடு என கெஞ்சினார். உடனே பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை  எடுத்து கொண்டு மூதாட்டி அணிந்து இருந்த வளையலையும் பறித்துக் கொண்டு பின்பக்க வாசல் வழியாக மர்ம நபர் தப்பி சென்றார். மூதாட்டியிடம் இருந்த நகை, பணம் உள்ளிட்டவைகள் திருடு போனது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரியவர அவர்கள் நெல்லை டவுண் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் என அனைத்து தரப்பிலும் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மூதாட்டியிடம் இருந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் விசாரணையில் அந்த இளைஞர் மூதாட்டியின் வீட்டின் அருகே வசிக்கும் பிரவீன்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் மூதாட்டியை பற்றி நன்கு தகவல் தெரிந்தவர் என்பதால் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், பைக் வாங்கும் கனவோடு இருந்த பிரவீன்குமார் இந்த நகையை விற்று அந்த பணத்தில் பைக் வாங்கலாம் என எண்ணி மூதாட்டியின் நகைகளை பறித்துச்சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பைக் வாங்க மூதாட்டியை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதோடு அவரிடம் இருந்த நகைகளை பறித்துச்சென்று தற்போது காவல்துறையிடம் மாட்டிக்கொண்டு இளைஞர் கம்பி எண்ணி வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண