சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு ரிஷியானந்தன் என்ற மகனும் பிரியங்கா என்ற மகளும் இருந்தனர். சம்பவத்தன்று குமாரின் மகனும் மகளும் அவர்களது டியோ வாகனத்தில் சென்றுள்ளனர்.


இந்நிலையில் முன்னால் சென்று கொண்டிருந்த  மாநகரப் பேருந்தை முந்தி செல்லும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது குமாரின் வாகனம் உரசியது. இதில் பின்னால் அமர்ந்து வந்த பிரியங்கா தவறி கீழே விழுந்தார்.


அப்போது பின்னால் வந்த மாநகரப் பேருந்தின் வலதுபுறத்தில் உள்ள  பின்பக்க டயர்  பிரியங்காவின், வயிறு மற்றும் தொடை பகுதியில் ஏறியது. இதில் பிரியங்கா பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பதறிப்போய் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் பேருந்து டயர் ஏறி இறங்கியதால் படுகாயமடைந்த பிரியங்காவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


இந்நிலையில்,  ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். 


பிரியங்கா மீது மாநகரப் பேருந்து ஏறி இறங்கியதால் அவர் உயிரிழந்ததை அடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காவல் துறையினரின் விசாரணையில்,  ”மாநகர அரசு பேருந்துக்கு பின்னால் சென்று கொண்டிருந்த அண்ணன் தங்கை  இருவரும் இருசக்கர வாகனத்தில் பேருந்தை முந்தி செல்லும்போது எதிரே வந்த பதிவெண் தெரியாத இருசக்கர வாகனத்தின் மீது உரசியதில் பின்னால் அமர்ந்து வந்த பிரியங்கா தவறி கீழே விழ பேருந்தின் வலது பக்க பின் டயர் இடுப்பு,தொடை பகுதியில் ஏறியதில்  பலத்த காயமடைந்தார்.  இவரை அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று (பிப்ரவரி 10) இரவு 9.20 பலியாகி உள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


தற்போது காவல் துறையினர் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தேடி வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.