மும்பை : மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் பெல்ஹர் பகுதியை சேர்ந்த ஒரு பெண், போஷ்ரி பகுதிக்கு தனது 10 மாத குழந்தையுடன் செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்காக நேற்று காலை அந்த பெண் வாடகை கார் ஒன்று புக் செய்துள்ளார். கார் அவரை ஏற்றுவதற்காக அந்த பெண் குறிப்பிட்டிருக்கும் பகுதிக்கு வந்துள்ளது.
ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை
அப்போது அந்த வாடகை காரில் சில பயணிகளும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் தனது 10 மாத குழந்தையுடம் காரில் பயணம் மேற்கொண்டார். அந்த காரில் அந்த பெண் ஏறிய பிறகு மும்பை அகமதாபாத் நெடுஞ்சாலையில் பல்ஹர் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, கார் ஓட்டுநரும், அவருடம் பயணித்த சில நபர்களும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர்.
கைக்குழந்தை உயிரிழப்பு
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவர்களை தாக்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த பெண்ணின் 10 மாத குழந்தையை காரில் இருந்து தூக்கி வீசியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணையும் காரில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். ஓடும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 10 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பலத்த காயமடைந்த அந்த பெண் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்
முன்னதாக, கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் மாடலாக உள்ளார். இவருக்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் நீண்ட நாட்களாக நண்பராக இருந்துள்ளார். இவர் கொச்சியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
மாடல் அழகியை அவரது தோழி கொச்சி எம்.ஜி சாலையில் உள்ள பார்ட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த இடத்திற்கு அந்த தோழியின் மூன்று ஆண் நண்பர்கள் வந்துள்ளனர். அவர்களை மாடல் அழகிக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்பு 5 பேரும் சந்தோஷமாக மது அருந்தி நடனம் ஆடினர். பின்பு மது அருந்திய மாடல் அழகி மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அவரை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி இளைஞர்கள் 3 பேர் அவரை காரில் ஏற்றியுள்ளனர்.
அப்போது அவரின் தோழி வேண்டுமென்றே அவர்களுடன் காரில் வரவில்லை எனக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் பெண்ணின் நண்பர்களான 3 பேர் இரவு முழுவதும் அந்த இளம் பெண்ணை காரில் வைத்து பல பகுதிகளுக்கு சென்றுள்ளனர். பின்பு அந்த பெண்ணை ஓடும் காரில் வைத்து அந்த 3 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.