Crime : தன்னை அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், குரங்குகளை ஏவி கடிக்க வைத்ததாக பாதிக்கப்பட்ட வடமாநில பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


வடமாநில பெண் புகார்


விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டலபுலியூர் என்ற இடத்தில் அன்பு ஜோதி என்ற ஆசிரமம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 200க்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரமத்திற்கு 2019ஆம் ஆண்டு வந்துள்ளார். இவர் தனது கணவரை 8  ஆண்டுகளுக்கு முன்பு விட்டுவிட்டு தமிழகம் வந்துள்ளார். தமிழகம் வந்த இந்த பெண்ணை மீட்பு குழு ஒன்று மீட்டு விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்துவிட்டுள்ளது.  


இதன்பின், 5 ஆண்டுகள் அந்த ஆசிரமத்திலேயே தங்கி இருந்த அப்பெண் பாலியல் ரீதியாக துன்புறத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடமாநில பெண் அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த ஆசிரமத்தை ஆய்வு செய்தனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.


அறையில் கட்டிப்போட்டு கொடுமை


ஆசிரமத்திற்கு வந்த போலீசார் புகார் அளித்த பெண் உட்பட பலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வடமாநில பெண் கூறியதாவது, "எனது கணவரை 8 ஆண்டுகளுக் முன்பு விட்டுவிட்டு தமிழகம் வந்துவிட்டேன். இங்கு ஊர் ஊராக சென்று கொண்டிருந்தபோது 2019ஆம் ஆண்டு ஒரு குழு ஒன்று விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்தனர்.


ஆசிரமத்தில் சமைக்கும் வேலை செய்வேன். ஆசிரமத்தில் வேலை பளு அதிகமாக இருந்தது. வேலை செய்ய தாமதமானதால் ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா மற்றும் அங்கு வேலை செய்பவர்கள் என்னை அறையில் பூட்டி வைத்து கட்டிப்போட்டு அடித்து கொடுமைப்படுத்தினார்கள்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.


பாலியல் வன்கொடுமை


இந்த நிலையில் ”டிசம்பர் 3ஆம் தேதி குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்து புதுச்சேரி அருகே கோட்டக்குப்பத்தில் உள்ள அவர்களது ஆசிரமத்திற்கு கட்டாயமாக அழைத்து சென்றனர். அங்கு நள்ளிரவு ஜூபின்பேபி என்னிடம் தவறாக நடத்துக் கொண்டதோடு, பாலியல் வன்கொடுமை செய்தார். மறுநாள் விழுப்புரம் ஆசிரமத்திற்கு அழைத்து வந்துவிட்டனர்" என்று வடமாநில பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.


தோழிக்கு நேர்ந்த கொடுமை


அங்கு எனக்கு நடந்த கொடுமை குறித்து, ஆசிரமத்தில் உள்ள எனது தோழி ஒருவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர், ஜூபின்பேபி என்னை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக தெரிவித்தார். இதை நாங்கள் வெளியே சொல்ல பயந்தோம். இந்நிலையில், ஜூபின்பேபி, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கேரளா சென்றார். இதை நாங்கள் பயன்படுத்தி ஆசிரமத்தில் இருந்த கோவை சென்றோம். இதனை அறிந்த அவர்கள் எங்களை பிடித்து மீண்டும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தனர்.


குரங்குகளை ஏவி கடிக்க வைத்தனர்


இதுமட்டுமின்றி, நான் இதையெல்லாம் போலீசாரிடம் சொல்லிவிடுவேன் என்பதால், அவர்கள் வளர்க்கும் குரங்களை தன்னை கடிப்பதற்காக அவிழ்த்து விட்டனர். இதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார். 


கைது


இதனை அடுத்து, வெளிமாநில பெண் அளித்த புகாரின்படி 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆசிரமம் கடந்த 17 ஆண்டுகளாக லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரிந்தது. இதனை அடுத்து, ஆசிரமத்திற்கு சீல் வைத்து அதில் இருந்த 142 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும், ஆசிரமத்தை நடத்தி வந்த ஜூபேபி அவரது மனைவி உட்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  


அதன்படி, ஆசிரமத்தை நடத்தி வந்த ஜூபேபி அவரது மனைவி மரியா, ஆசிரமத்தில் வேலை பார்த்த மோகன், முத்துமாரி, கோபிநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆசிரம நிர்வாகி ஜூபேபியை மார்ச் 2ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.