நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகில் உள்ள கூத்தென்குழி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் சட்ட விரோதமாக பீடி இலைகள் கடத்தப்படுவதாக கூடங்குளம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் விணுக்குமார் தலைமையில்  காவல்துறையினர் கடற்கரைக்கு சென்றனர். அப்போது நாட்டுப்படகில் இருந்து வாகனங்களில் பீடி இலை உள்ள சாக்கு மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்துள்ளனர்.  குறிப்பாக 84 பீடி இலை பண்டல்களை இலங்கைக்கு கடத்த 11 பேர் கொண்ட கும்பல் ஏற்றிகொண்டிருந்தனர். காவல்துறையினர் சுற்றி வளைப்பதற்குள் சுதாரித்து கொண்ட கடத்தல்காரர்கள் பீடி இலை மூட்டைகளை கடலுக்குள் அனுப்பி விட்டு படகுடன் கடலுக்குள் தப்பி சென்றுள்ளனர். தொடர்ந்து இருவர் அங்கிருந்து வாகனத்தில் தப்பி செல்ல முயன்ற போது காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர்.




இந்த நிலையில் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் பணகுடியை சேர்ந்த கிறிஸ்டோபர் ராஜசிங் மற்றும் சக்தி நயினார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலை மறைவான கூத்தென்குழியை சேர்ந்த டைசன், பெசி, டென்னிஸ், கெமிஸ்ட்டன், தொம்மை சுரேஷ், ரூபட், இக்னேஷ், மாடன்பிள்ளை தர்மத்தைச் சேர்ந்த துளசி மணி மற்றும் பணகுடியை சேர்ந்த வாகன உரிமையாளர் மணிகண்டன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் தூத்துக்குடியில் இருந்து பீடி இலை பண்டல்களை கூத்தென்குழிக்கு கொண்டு வரும்போது காவல்துறையினர் வாகனத்தை மடக்கி பிடித்து பீடி பண்டல்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து இதே போன்ற கடத்தல் சம்பவங்கள் கூத்தன்குழி கடற்கரையில் அடிக்கடி நிகழ்வதாக கூறப்படுகிறது. மேலும் கடத்தப்பட்ட பீடி பண்டல்கள் பல லட்ச ரூபாய் மதிப்புடையது என்றும் கூறப்படுகிறது.  


Join Us on Telegram: https://t.me/abpnaduofficial




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண