நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர்  பிரபு (35). திருநங்கையான இவர் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார், இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர் மருத்துவமனையில் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில், தான் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் கடந்த 17 ஆம் தேதி நாங்குநேரி டோல்கேட் அருகே வாகனங்களில் வருபவர்களிடம் பணம் வசூல் செய்து கொண்டிருந்தேன்,


அப்போது இரண்டு பேர் தன்னை லாரியில் ஏறுமாறு கூறி அழைத்து சென்றனர். பின்னர் தன்னிடம் இருந்த பணத்தை கேட்டு மிரட்டினர். நான் கொடுக்க மறுத்த நிலையில் இறக்கி விடுமாறு சத்தமிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் லாரியில் இருந்த சுத்தியலால் என்னை  நெற்றியில் தாக்கினர். பின் ரெட்டியார்பட்டி மலை அருகே என்னை இறக்கி விட்டு சென்றுவிட்டனர். இதனால் காயமடைந்த நான் மயக்கமடைந்து விட்டேன். அதன் பின்னரே அங்கு வந்தவர்கள் என்னை மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர் என காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.




இந்த சூழலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநங்கையில் உடல் நிலை திடீரென மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சூழலில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்போது கொலை வழக்காக மாற்றி லாரியில் அழைத்து சென்ற இருவரை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர் அந்த வழியாக  வந்த லாரியின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவரை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நெல்லையில் திருநங்கை ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.








 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண