திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் பகுதியில் பெரிய ஏரிக்கரை அருகே பாலானந்தல் கிராமத்துக்கு செல்லும் வழியில் கிராமத்துக்கு செல்லும் சாலையில் சாலை ஓரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று விழுந்து கிடந்துள்ளது. அதன் அருகே ரத்தக்கரையும் இருந்துள்ளது. செல்போன் ஒன்றும் இருந்துள்ளது. அதன் அருகே சாலையோரம் இருந்த வைக்கோல் போர் ஒன்றும் எரிந்து சாம்பலாகி இருந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் சந்தேகம் படும்படி இருந்ததால் உடனடியாக மங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நஸ்ருதீன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் கீழே இருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை காவல்துறையினர் கைப்பற்றினர். பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 


அந்த விசாரணையில் அந்த இருசக்கர வாகனம் செல்போன் ஆகியவை திருவண்ணாமலை அருகில் உள்ள பாலானந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் வயது (33) என்பவருடையது என காவல்துறையினருக்கு தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் மணிகண்டன் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவருடைய மனைவி மணிகண்டன்  நேற்று இரவு வீட்டில் இருந்து சென்றதாகவும் இன்று வரையில் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும் காணாமல் போன மணிகண்டன்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மங்களம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவியை கடத்தி சென்று கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மணிகண்டனின் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கினாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்தனர்.


 




மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் காவல்துறையினர் தகவல் சேகரித்தனர். அவர் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது இதற்கிடையே எரிந்த நிலையில் உள்ள வைக்கோல் போரில் உடல் பாகம் எதுவும் உள்ளதா என காவல்துறையினர் பரிசோதித்தனர். அப்படி எதுவும் சிக்கவில்லை, பின்னர் காவல்துறையினர் மோப்ப நாய் மியாவ் வரவைத்து மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காணாமல் போன மணிகண்டன் நிலை குறித்து மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் முன்விரோதம் காரணமாக எதிர் தரப்பினர் அவரை கடத்தி சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன மணிகண்டனுக்கு திருமணமாகி 6 மாத குழந்தை உள்ளது. இதனால் மங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.