மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருநகரி கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கமலக்கண்ணன் வீட்டின் பின்புறம் வழியாக வீட்டிற்குள்  உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் பீரோவை உடைத்து நகையை தேடி கொண்டிருந்துள்ளார். அப்போது, கமலக்கண்ணன் மகள் பள்ளி முடிந்து வீட்டிற்குள்  வந்துள்ளார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 




அப்போது பீரோவுக்கு அருகில் மறைந்திருந்த திருடன் சற்று எதிர்பாராத நேரத்தில் பள்ளி மாணவியை தாக்கிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த பள்ளி மாணவியை மீட்டு சீர்காழியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.




மேலும், இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் மாணவியிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து திருவெண்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற திருடன் பள்ளி மாணவியை தாக்கி விட்டு சென்ற சம்பவம் திருநகரி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




பத்து வருடங்களாக சீரமைக்கப்படாத கடலங்குடி- குமாரமங்கலம் மார்க்கத்தில் 4.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தொடங்கி வைத்தார்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் கடலங்குடி-குமாரமங்கலம் இடையே சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை கடந்த பத்து ஆண்டுகளாக சேதம் அடைந்து காணப்பட்டது. இதனால் கடலங்குடி, வடக்கு காருகுடி, குமாரமங்கலம் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 




இவர்களது தொடர் கோரிக்கையை அடுத்து இந்த மார்க்கத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (2022-2023)-இன் கீழ் புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியினை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய பொறியாளர் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




மயிலாடுதுறையில் மிதமான மழை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.


தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 4 -ஆம் தேதி வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதன் காரணமாக அடுத்து வரும் 5  நாட்களுக்கு லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, காலை 8 மணிக்கு தொடங்கி சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. அதன் பின்னர் வெயில் தொடங்கிய நிலையில், காலை 10 மணி முதல் மீண்டும் வானம் இருண்டு மழை வரும் சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.