கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் மகன் பத்மநாதன் (25) சிதம்பரத்தில் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
வழக்கம் போல் பத்மநாதன் இன்று காட்டுமன்னார்கோயில் வசந்தம் நகர் பகுதியில் உணவு டெலிவரி செய்து வந்தார். அப்பொழுது ரோந்து பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் உணவு டெலிவரி செய்யும் பத்மநாதன் வாகனத்தில் வைத்திருந்த பெட்டியை சோதனை செய்தனர்.
அப்போது பத்மநாதன் வாகனத்தில் உள்ள உணவு பெட்டியில் உணவு மற்றும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த சுமார் 10 கஞ்சா பொட்டலம் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து பத்மநாதனை காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையிலான போலீசார் பத்மநாதனிடம் விசாரணையில் கஞ்சா வெளி மாநிலங்களில் இருந்து இரயில் மூலம் கடத்தி வருவதாகவும் பத்மநாதன் போலீசார் விசாரணையில் தெரிவித்தார்.
உணவு டெலிவரி செய்யும் வாகனத்தை வைத்துக்கொண்டு கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்