புதுச்சேரியில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கோபாலன்கடை அம்மாநகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ராஜா வயது 32. இவர் கார் டிரைவர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அம்சா (36). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை 5 மணியளவில் ராஜா தனது வீட்டில் இருந்து தந்து இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுச் சென்றார். கோபாலன்கடை மெயின்ரோடு அருகே வந்த போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா அவர்களிடம் இருந்து தப்பிக்க வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடினார். உடனே அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கழுத்து பகுதியில் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
ராஜா இறந்து விட்டதை உறுதி செய்த பிறகே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார். இது பற்றிய தகவல் அறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், வில்லியனூர் காவல் ஆய்வாளர் வேலையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த ராஜாவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வில்லியனூர் காவல் ஆய்வாளர் வேலையன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதில் அதே பகுதியை சேர்ந்த சிலரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந்தேதி வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்த புதுமாப்பிள்ளை சதீஷ் என்கிற மணிகண்டன் (28) கொலை வழக்கில் ராஜா முக்கிய குற்றவாளி ஆவார். ரவுடியான அவர் மீது காவல் நிலையங்களில் செல்போன் திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் ஒரு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ராஜா தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சிலரை தாக்கினார். அதற்கு பழிக்குப்பழியாக எதிர்தரப்பினரால் ராஜா கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ராஜாவின் பெற்றோர், அவரது மனைவி மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுவையில் மீண்டும் கொலை சம்பவங்கள் தலைதுக்கியுள்ளன. இதனால் புதுச்சேரி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்