மும்பையில்   24 வயது பெண்  ஒருவர் தனது தாயை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து மறைத்து வைத்திருந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. 


மத்திய மும்பையில் உள்ள  லால்பாக் பகுதியில்  வீணா என்ற பெண்ணை கடந்த 3 மாதங்களாக காணவில்லை என கூறி அவரது சகோதரர் கலாசௌகி காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வீணாவின் மகளான 24 வயது பெண் ரிம்பிள் ஜெயின் முன்னுக்குப்பின் முரணான தகவலை அளித்தார். 


இதனால் சந்தேகமடைந்த போலீசார் வீட்டை சோதனை செய்தபோது முதலில் ஒரு தொட்டியில் கை மற்றும் கால்களை கண்டனர். அதனைத் தொடர்ந்து  கைது செய்தனர். மேலும் ரிம்பிள் ஜெயின் இருந்த வீட்டை சோதனை செய்ததில்  வீணாவின் உடல் துண்டு துண்டாக வெட்டி அலமாரியில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 


இதனிடையே ரிம்பிள் ஜெயினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது தாயுடன் ஏற்பட்ட தகராறில் ரிம்பிள் கொலை செய்துள்ளார் என்றும், வீணாவின் உடலை கத்தி, மின்சார அறுவை இயந்திரம் உள்ளிட்டவை கொண்டு வெட்டியுள்ளார். மேலும் வீட்டினுள் துர்நாற்றம் அடிக்காமல் இருக்க 200 க்கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் மற்றும் ஏர் ஃப்ரெஷனர்களைப் ரிம்பிள் பயன்படுத்தியுள்ளார். 


அதேசமயம் பக்கத்து வீட்டுக்காரர் வீணாவைப் பற்றி ரிம்பிளிடம் கேட்டபோது, அவர் கான்பூருக்கு சென்றுள்ளதாகவும், வர தாமதமாகும் என சொன்ன கதையையே திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார். உறவினர்களிடம் தொடர்பை துண்டித்த ரிம்பிள் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும் போது அக்கம் பக்கத்தினர் துர்நாற்றம் பற்றி புகார் தெரிவிக்க, அருகிலிருந்த மருந்தகத்தில் இருந்து பெறப்பட்ட வாசனை திரவியத்தை வீடு முழுவதும் தெளித்துள்ளார்.


அதன்பின்னர் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் உணவையும் வீட்டிலிருந்து ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் வீணாவின் உறவினர் பணம் கொடுக்க வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் கதவை இலேசாக திறந்த ரிம்பிள் கையை மட்டும் நீட்டியுள்ளார். வீணா எங்கே என கேட்டதற்கு, கான்பூருக்குப் போயிருக்கிறார் என ரிம்பிள் சொல்லியிருக்கிறார். இதில் ஏதோ தவறு  உள்ளது என்பதை கண்டறிந்த உறவினர், மற்றொரு உறவினரை அழைத்து வந்த ரிம்பிள் கதவை திறக்க மறுத்துள்ளார். அதன்பிறகே போலீசாருக்கு புகார் சென்று உண்மையான நிலவரம் வெளிவந்துள்ளது.