காஞ்சிபுரம் சதாவரம் சாலையில் சின்ன காஞ்சிபுரம் கே. எம். வி. நகர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் தமிழ்வாணன். இவர் தனியார் பட்டு உற்பத்தி நிலையத்தில் நெசவாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று இவரது நண்பரின் தொலைபேசி அழைப்பு காரணமாக காஞ்சிபுரம் பெருமாள் கோயில் பகுதி அருகே உள்ள சதாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
மர்ம நபர்கள் தாக்குதல்
அப்போது அவர்களை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் தமிழ்வாணனை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த தமிழ்வாணன் உதவி கேட்டு அழைத்தபோது யாரும் உதவ முன்வரவில்லை. மர்ம நபர்கள் அங்கிருந்து சென்ற பிறகு அவரது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அவரை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
உயிரிழப்பு
அடையாளம் தெரியாத நபர்களின் வெறிச்செயல் காரணமாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல்நிலை மோசமாவதை கண்டு அவருக்கு சி.பி.ஆர். மருத்துவ உதவியினை மருத்துவர்கள் செவிலியர்கள் என மாறி மாறி முயற்சி செய்தும் சிகிச்சை பலனின்றி தமிழ்வாணன் உயிரிழந்தார்.
தீவிர விசாரணை
சம்பவம் குறித்து அறிந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் மருத்துவமனைக்கு வந்து காவல்துறையிடம் விவரங்களை கேட்டறிந்தார். தமிழ்வாணன் கொலைக்கு காரணமான நபர்கள் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அவரது தொலைபேசி நண்பர்கள் மற்றும் ஏதேனும் முன் விரோத காரணம் தொடர்பான நபர்கள் என அனைத்து தரப்பு விவரங்களையும் தற்போது காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் சந்தேகத்தின் பேரில் சிலரைக் குறிப்பிட்டதன் பேரில் அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் அவர்களின் பெயரில் ஏற்கனவே வழக்கு உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் உணவருந்த அவரை அவரது தாய் அழைத்திருந்த நிலையில், தனக்கு போன் வந்ததாக கூறி விரைவில் திரும்பி வருவதாக சென்ற நிலையில் அப்பகுதிக்கு தமிழ்வாணன் செல்ல காரணம் என்ன? என்பது போன்ற கோணங்களிலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தமிழ் வாணன் கொலை செய்தியை கேட்ட தாய் மற்றும் தந்தை மருத்துவமனையில் கதறி அழுதது பார்ப்போரை மனம் கலங்க செய்தது. பிள்ளைகள் நாள்தோறும் மேற்கொள்ளும் செயல்கள் குறித்து பெற்றோர்கள் கண்காணித்து தவறான வழியில் செல்லும் நிலையில் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதே தற்போதைய நிலையாக உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்
நடந்தது என்ன?
காவல்துறை நடத்திய விசாரணையில் சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்மாணன் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் குணா என்பவரை சந்தித்து பேசி உள்ளார். இதில் இருவரும் குடிபோதையில் இருந்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், குணாவின் தந்தை ரகு என்பவர் என் மகனை அவதூறாக பேசுகிறாயே, என்று தமிழ்வாணனை கடும் சொற்களால் திட்டி உள்ளார். இதனையடுத்து வீட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை ரகு எடுத்து வந்து தமிழ்வாணனை கழுத்து தலை, கை ,கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி உள்ளார். இதனாலே இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.