புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை, மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் ஆர்.கே.நகர் மாஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் பிரவீன் (வயது 19). ரவுடியான இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவர் மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு அரியாங்குப்பம் சுப்பையா நகரில் நடந்த ஜிம் பாண்டியன் கொலையில் பிரவீனுக்கும் தொடர்பு உள்ளது. அப்போது பிரவீன் சிறுவன் என்பதால் அந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவர் வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் ஆர்.கே. நகரில் உள்ள பெரியார் சிலை அருகில் பிரவீன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது அங்கு சாலையோரம் பதுங்கி இருந்த மர்மகும்பல் திடீரென்று பிரவீனை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் ஓட ஓட விரட்டிச்சென்று கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, கை, காலில் வெட்டுக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து பலியானார். பிரவீன் இறந்ததை உறுதி செய்தபின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த கொலை பற்றி தகவல் அறிந்த தெற்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த பிரவீன் உடலை பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பிரவீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த உடன் அவரது உறவினர்கள் அங்கு திரண்டுவந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பதற்றமாக சூழ்நிலை உருவானது. உடனே போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்துபோக செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது கொலை சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரவீனை கொலை செய்தது யார் அவரை எதற்காக கொலை செய்தனர். ஜிம் பாண்டியன் கொலைக்கு பழிக்குபழியாக கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்