தோகைமலை அருகே லாரி டிரைவர் மர்ம மரணம்.


தோகைமலை அருகே லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:




லாரி டிரைவர்


நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை இந்திரா காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 55), லாரி டிரைவர். இவர் இரவு காரைக்குடியில் இருந்து ஒரு லாரியில் தைலம் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு தோகைமலை வந்தார். பின்னர் தோகைமலை அருகே உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் தைல மரக்கட்டைகளை இறக்கிவிட்டு, அதிகாலை 3 மணிக்கு காகித ஆலைக்கு வெளியே வந்தார்.


பின்னர் லாரியை சாலையோரம் ஒரு இடத்தில் நிறுத்திய கணேசன் அவரது போனில் லாரியின் உரிமையாளரிடம் மற்ற டிரைவரை உடனடியாக அனுப்பி வைக்கும்படி கூறிவிட்டு லாரியின் படுக்கையில் உறங்கி விட்டார்.




 


மர்ம மரணம்


இதையடுத்து காலை மற்றொரு டிரைவரான ஜெயராஜ் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது லாரியின் உள்பகுதியில் கணேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ் தோகைமலை போலீசாருக்கும், லாரி உரிமையாளருக்கும், கணேசனின் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார். பின்னர்  தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




வழக்குப்பதிவு


இந்தச் சம்பவம் குறித்து கணேசன் மனைவி திலகவதி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து, கணேசன் எப்படி இருந்தார்? என விசாரணை நடத்தி வருகிறார்.




குளித்தலை பகுதியில் நாய் கடித்து பத்துக்கும் மேற்பட்டோர் காயம்


குளித்தலை பகுதியில் நாய் கடித்து பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


10 பேர் காயம்


கரூர் மாவட்டம், குளித்தலை நகரப் பகுதியில் கழுத்தில் பெல்ட் அணிந்த நிலையில் செவலை நிறம் கொண்ட நாய் ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. இந்த நாய் வீட்டில் வளர்க்கப்படும் நாய் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக இது சாலையில் நடந்து செல்பவர்களையும், சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடித்துவிட்டு அங்கிருந்து ஓடி விடுகிறதாம். கடந்த சில நாட்களாக சுமார் 10-க்கும் மேற்பட்டோரை இந்த நாய் கடித்துள்ளதாக கூறப்படுகிறது.


மருத்துவமனையில் சிகிச்சை


இந்த நாய் கடித்ததில் குளித்தலை நகர துணை செயலாளர், பள்ளி சிறுவர், சிறுமிகள், வக்கீல், மீன் பிடிக்கும் தொழிலாளி உள்பட பலரை கடித்துள்ளதாம்.நாய் கடித்ததில் காயம் அடைந்த சிலர் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இது தொடர்பாக நகராட்சி அலுவலர்களுக்கு பலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அந்த நாயை பிடிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த நாய்க்கு வெறிபிடித்து விட்டதாகவும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிவதால் அந்த நாயை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


.