Crime: உத்தர பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் வெட்டப்பட்ட தலையை கையில் எடுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது கூட மணிப்பூரில் குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கைளை ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
காதல் விவகாரம்:
உத்தர பிரதேச மாநிலம் பாரபங்க மாவட்டம் ஃபதேபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரியாஸ். இவரது சகோதரி ஆஷிபா. இவர்கள் இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஆஷிபா என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் சந்த் பாபு என்பவருடன் பழக்கும் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம், ஆஷிபாவின் சகோதரர் ரியாஸ்க்கு தெரியவந்தது. இதனால், ஆஷிபாவை கண்டித்துள்ளார் ரியாஸ். இருப்பினும் அதனை கண்டு கொள்ளாத ஆஷிபா, மீண்டும் அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் ஆஷிபா வீட்டை விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து போலீசார், ஆஷிபாவை மீட்டு அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர். இருப்பினும், மீண்டும் ஆஷிபா, சந்த பாபுவை காதலித்து வந்துள்ளார்.
அக்காவை கொலை செய்த தம்பி:
ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த ரியாஸ், அவரது சகோதரியான ஆஷிபாவிடன் சம்பவத்தன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் நீடித்த நிலையில், அவரது சகோதரி ஆஷிபாவை தலையை வெட்டிக் கொலை செய்துள்ளார். அதில் தலையை மட்டும் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர், ரத்த கறையுடன், தலை பாகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சாலையில் நடந்துச் சென்றுள்ளார் ரியாஸ். இதனை பார்த்து பீதியடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பகீர் வீடியோ:
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரியாஸை கைது செய்து அவர் கையில் வைத்திருந்த உடல் பாகத்தை கைப்பற்றினர். இதனை அடுத்து, ஆஷிபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், ரியாஸிடன் விசாரித்ததில் தனது அக்காவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், ரத்தக்கறையுடன் சாலையில் அந்த நபர் நடந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அந்த இளைஞர் ரத்த கறையுடன் கையில் வெட்டப்பட்ட தலையை எடுத்துச் சென்றுள்ளது போன்று வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.