நடிகர் திலகம், நடிப்பு சக்கரவர்த்தி என போற்றப்படும் சிவாஜிக்கு இன்று (ஜூலை) 22ஆவது நினைவு நாள்.


எந்த படமாக இருந்தாலும், எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும், தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி கொண்டு நடிப்பின் உச்சமாக திகழ்ந்த சிவாஜியின் சில நினைவுகள். 



  • சிவாஜி முதன் முதலில் போட்ட வேடம் பெண் வேடம்தான். ராமனை ரசிக்கும் சீதையாக பெண் வேடத்தில் சிவாஜி நடித்திருந்தார். 

  • இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு கலைஞரின் கதை, வசனத்தில் உருவான பராசக்தி படம் தமிழ் திரையுலகில் சிவாஜி என்ற மாபெரும் கலைஞனை அறிமுகப்படுத்தியது. பராசக்தியின் கிளைமாக்ஸ் காட்சியில் குணசேகரான வந்து சிவாஜி பேசும் வசனம் இன்றும் பேசக்கூடியது. இந்த படத்துக்காக சிவாஜி வாங்கிய சம்பளம் ரூ.250 மட்டுமே. 

  • 1946ம் ஆண்டு அண்ணா எழுதிய சிவாஜி கண்ட ’இந்து ராஜ்யம்’ நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்ததைப் பார்த்து வியந்த தந்தை பெரியார், கணேசனை சிவாஜி கணேசன் என அழைத்தார். 

  • மனோகர, ராஜ ராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற சரித்திர படங்களில் நடித்த சிவாஜி, கண்முன் அந்த கதாபாத்திரங்களையே கொண்டு வந்து நிறுத்தினார். 

  • வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், ராஜபார்ட் ரங்க துரை படங்களில் நடித்ததன் மூலம் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் உணர்வுகளை வெளிகாட்டினார். 

  • புராண கதாபாத்திரங்களிலும், கடவுளாகவும் நடித்து பக்தியை மக்களுக்கு ஊட்டினார். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வன், கந்தன் கருணை, திருமால் பெருமை படங்களில் நடித்து பக்தியை வெளிக்காட்டினார். 

  • பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பந்த பாசம், பார் மகளே, பச்சை விளக்கு  படங்களில் நடித்து பாசத்தை புரிய வைத்தவர்

  • வித்தியாசமான கதைகளிலும், கேரக்டர்களிலும் நடிப்பதை விரும்பும் சிவாஜி, பலே பாண்டியா, ஆலயமணி, குலமகள் ராதை, புதிய பறவை, ஆண்டவன் கட்டளை, வியட்நாம் வீடு பாரத விலாஸ், வசந்த மாளிகை, தில்லானா மோகானாம்பாள், உயர்ந்த மனிதன்,  சொர்க்கம், ஞான ஒளி, கௌரவம் படங்களில் நடிப்பின் தனித்திறமையை வெளிப்படுத்தி இருந்தார். 

  • சபாஷ் மீனா, பலே பாண்டியா, ஊட்டி வரை உறவு, கலாட்ட கல்யாணம், எமனுக்கு எமன் படங்களில் நகைச்சுவையாக நடித்து அசத்தி இருப்பார். 

  • பாசமலர், பாவ மன்னிப்பு, வீரபாண்டிய கட்டபொம்மன் படம் மூலம் ஜெமினி கணேசனுடனும், கூண்டுக்கிளி படத்தில் எம்ஜிஆர் உடனும் சிவாஜி நடித்து இருப்பார். 

  • படம் ஆரம்பித்ததுமே சிவாஜி இறந்து போகும் படம் அந்த நாள். துப்பறியும் கதையை கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஒரு பாடல்கள் கூட இல்லை. இரண்டாம் உலகப்போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் இன்றும் பேசப்படுகிறது. 

  • 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சிவாஜி, 9 தெலுங்கு, 2 மலையாளம் மற்றும் ஒரு இந்தி படத்தில் நடித்துள்ளார். கவுரவ தோற்றத்தில் 19 படங்களில் நடித்துள்ளார். 

  • தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த ’வணங்காமுடி’படத்துக்காக ரசிகர்கள் கட் அவுட் வைத்துக் கொண்டாடினர். 

  • ரத்த திலகம் படத்தில் சிவாஜியின் நடிப்பை பாராட்டி சென்னை சினிமா ரசிகர் சங்கம் துப்பாக்கியை பரிசாக கொடுத்தது. 

  • அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்த சிவாஜிக்கு நிறைவேறாத ஆசை ஒன்றும் இருந்துள்ளது. அது தந்தை பெரியாராக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டது. ஆனாலும் கடைசி வரை அது நிறைவேறவில்லை. 

  • எகிப்து அதிபர் காமல் அப்தெல் நாசர் இந்தியா வந்தபோது அவரை வரவேற்று உபசரிக்கும் பொறுப்பு சிவாஜி கணேசனுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜியின் நடிப்பை பார்த்து அப்தெல் நாசர் வியந்து பாராட்டியதால் அவரை வரவேற்கும் பொறுப்பை சிவாஜிக்கு முன்னாள் பிரதமர் நேரு வழங்கி இருந்தார். 

  • 1962ம் ஆண்டு அமெரிக்காவின் கலாச்சார பரிமாற்றத்துக்காக அமெரிக்கா சென்ற முதல் இந்திய நடிகராக சிவாஜி இருந்தார். அப்போது நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக சிவாஜியை நியமித்து அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி உத்தரவிட்டிருந்தார். இதன் மூலம் ஒரு நாள் அமெரிக்காவின் மேயராக இருந்த பெருமையும் சிவாஜிக்கு உள்ளது. 

  • எகிப்தின் கெய்ரோவில் நடந்த ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விழாவில் சிவாஜிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. 

  • சென்னை மெரினா கடற்கரையில் சிலை வைக்கப்பட்ட ஒரே நடிகர் என்ற பெருமையையும் பெற்றவர் சிவாஜி.