Crime : லக்னோவில் துணிக் கடையில் வேலை செய்து வந்த பெண்ணை, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


லக்னோவில் துணிக் கடை நடத்தி வருபவர் சுராஜ் டிவாரி (23). இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு சமூக வலைதளம் மூலம் ஒரு பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் தனக்கு வேலை இல்லை என்று கூற, அவர் தனது துணிக் கடையில் வேலைக்கு சேர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.


இதனால் அந்த பெண்ணும் கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துணிக் கடையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது ஒரு நாள் அந்த பெண்ணை இரவில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, தனியாக அழைத்து சென்று, அவரை தாக்கி, வலுக்கட்டயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை புகைப்படமும், வீடியோவும் எடுத்து வைத்து மிரட்டி வந்துள்ளார். 


புகைப்படத்தையும், வீடியோவையும் வைத்து சுராஜ் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலையை விட்டு நின்றார். இதனால், சுராஜ், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தொடர்ந்து வீடியோவை காட்டி தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.


பின்னர், சில நாட்களுக்கு பிறகு, அந்த பெண் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவை வழிமறித்த சுராஜ், புகைப்படத்தை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, சுராஜ் டிவாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.


மற்றொரு சம்பவம்


மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞர் கடற்கரை அருகே உள்ள மஹிம் கிராமத்திற்கு அழைத்து சென்றார்.  அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பாலடைந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றார். பின்பு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து, இளைஞரின் நண்பர்கள் அந்த இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்களும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அந்த சிறுமி வீட்டிற்கு திரும்பியதும் இதுகுறித்து பெற்றோருக்கு தெரிவித்தார். பின்பு, மாவட்ட காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து 8 பேரை போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.


அதிகரிக்கும் குற்றங்கள்


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்துக்கு  சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிமாகும். கடந்த 2014ல் 30,906 புகார்கள் மகளிர் ஆணையத்தில் பதிவாகி உள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் 16,876  புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3,004 புகார்கள் கிடைக்க பெற்றன.  மூன்றாவது இடமாக மகாராஷ்ராவில்  1,381 புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.