Crime : கேரளாவில் ஹோட்டல் உரிமையாளரை கடத்தி சென்று, அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கொலை செய்துவிட்டு இப்போதெல்லாம் அந்த சடலங்களை சுடுகாட்டில் புதைப்பது கிடையாது. நேராக சடலத்தை ஃப்ரிட்ஜிலும், சூட்கேஸிலும் தான் வைத்து விடுகின்றனர். டெல்லியில் நடந்த ஷ்ரத்தா கொலையை போலவே இப்போதும், ஒரு கொடுமை நம் நாட்டில் நடந்துள்ளது.
சூட்கேஸில் உடல் பாகங்கள்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் நகரில் வசித்து வந்தவர் சித்திக் (58). இவர் கோழிக்கோடு எலத்திபாலம் ஹோட்டல் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இவரது குடும்பத்தினர் நான்கு நாட்களாக தேடி வந்தும் கிடைக்காததால் கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவ செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவரது வங்கிக் கணக்கில் அதிகளவில் பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையில், நேற்று காலை பாலக்காடு அருகே அட்டப்பாடியை அடுத்த அகளி வனப்பகுதியில் பெரிய சூட்கேஸ் ஒன்று திறந்து கிடந்தது.
துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்
அதில் ஆண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் அடைத்து வைத்திருப்பது தெரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் உடல் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டது மாயமான ஹோட்டல் உரிமையாளர் சித்திக் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து, யார் கொலை செய்தது என்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் சித்திக் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த பாலக்காடு செற்புழச்சேரி நகரைச் சேர்ந்த சிபில் (36) மற்றும் பர்ஹானா (34) ஆகியோர் மாயமானதாக தகவல் கிடைத்தது. அப்போது இவர்கள் இருவரும் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, சந்தேகத்தின் பேரில் போலீசார் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டன்ர். அப்போது சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்
பரபர வாக்குமூலம்
அதன்படி, ”சித்திக்கின் ஹோட்டலில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தோம். ஆனால் கடந்த 18ஆம் தேதி சித்திக் எங்களை வேலையில் இருந்து நீக்கினார். இதனால் எங்களுக்கு போதுமான அளவில் வருமானம் இல்லை. இந்த கோபத்தில் அவரிடம் இருந்து பணம் பறிக்கவும், கொலை செய்யவும் கடந்த 23ஆம் சித்திக்கை அவரது காரிலேயே கடத்தி கோழிக்கோடு அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றோம்.
அங்கு அவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து, அகளி வனப்பகுதியில் வீசி சென்றதாகவும், இதற்கு உதவியாக எனது தம்பிக்கு ஆஷிக்கும் இருந்ததாக” வாக்குமூலம் அளித்தனர். இதனை அடுத்து, ஹோட்டல் உரிமையாளரை கொலை செய்த குற்றத்திற்காக சிபில், பர்ஹானா, அவரது தம்பி ஆஷிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.