காரில் கடத்தி பாலியல் அத்துமீறல் என புகார்

 

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் ஒரு வீட்டின் கதவை பெண் ஒருவர் தட்டியுள்ளார். தொடர்ந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்களிடமிருந்து போராடி தப்பி வந்ததாகவும் காவல் நிலையத்தில் தன்னை ஒப்படைக்கும்படியும் கூறி உள்ளார்.



 

திருமணம் செய்ய முடியாது

 

இதனை அடுத்து சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த 21-வயது மதிக்கத்தக்க பெண் என்பதும், சென்னை சைதாப்பேட்டையில் தங்கி டெலிகாலராக(Call Centre) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், இவருக்கும் உத்திரமேரூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டதாகவும், அவரை திருமணம் செய்ய பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்ய முடியாது என சலீம் கூறி உள்ளார். 



 

கூட்டு பாலியல் பலாத்காரம் 

 

மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். அதேபோல நேற்று இரவும், செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்த பெண்ணை சலீம் சாலவாக்கம் அருகே மாம்பாக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே திருமணம் செய்து கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பெண்ணை தாக்கிய சலீம் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். தொடர்ந்து அப்பெண் அருகே இருந்த வீட்டிற்கு சென்று சலீமை காவல்துறையிடம் சிக்க வைக்க கூட்டு பாலியல் பலாத்காரம் என நாடகமாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 



போலீசில் சிக்க வைத்த பெண்

 

முன்னதாக காவல்துறையினரிடம் தன்னை காரில் நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக பெண் கூறியதால் செங்கல்பட்டு நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பந்தப்பட்ட பின் சலீமுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்ட நிலையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணம் செய்ய மறுத்த காதலனை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக நாடகமாடி போலீசில் சிக்கவைத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர் தெரிவிக்கையில், "காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே 4 பேர் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் புகார் அளித்த பெண்மணி பொய் புகார் அளித்துள்ளதாகவும், காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இவ்வாறு தன்னை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவ்வாறு எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது, மேலும் அவர் பொய் புகார் கொடுத்ததும், அவர் காவல்துறையிடம் நாடகமாடியதும் காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அம்பலமானதாக" அவர் தெரிவித்தார்.